மேலும்

பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்- ஒப்புக் கொள்கிறார் சவேந்திர சில்வா

சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டங்களில் தவறுகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.

இந்தியாவின் “Impact Stories” செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை தொழில்முறையாக எதிர்த்துப் போரிட்டதாகவும், இறுதி இராணுவத் தாக்குதலின் போது பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்க முயன்றதாகவும் கூறியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் 58-வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, தன் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு மீண்டும் மீண்டும் விளக்கம் கோரப்பட்டதாக தெரிவித்துள்ளார்

“எனக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது, அண்மையில் பிரித்தானியாவும் தடை விதித்துள்ளது. எதற்காக? நான் என்ன தவறு செய்தேன் என்று சொல்லுங்கள் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

“நான் ஒரு போர்க்குற்றவாளி அல்ல. நான் என் நாட்டிற்காகப் போராடினேன்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை  இராணுவச் சட்டத்தை மீறியிருந்தால், உரிய வழிமுறைகளின் கீழ் தாம் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

போரின் இறுதிக் கட்டத்தில், கட்டளைப் பொறுப்பின் மூலம், மனித உரிமைகளின் பெரும் மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நம்பகமான தகவல்களைக் காரணம் காட்டி, 2020-ல் அமெரிக்கா, ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினர் மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.

பின்னர், மோதலின் போது மனித உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, 2025-ல் பிரித்தானியா அவர் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

சண்டையின் போது பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதை ஒப்புக்கொண்டாலும், சிறிலங்கா இராணுவம் வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைத்தது என்ற குற்றச்சாட்டுகளை சவேந்திர சில்வா நிராகரித்தார்.

“பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும், ஆனால் அவை வேண்டுமென்றே செய்யப்பட்டவை அல்ல,” என்று கூறிய அவர், இராணுவத் திட்டமிடல் பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்ததாகவும், அருகில் பொதுமக்கள் காணப்பட்டபோது இலக்குகள் தவிர்க்கப்பட்டதாகவும் கூறினார்.

தாக்குதலின் இறுதிக் கட்டங்களை நினைவு கூர்ந்த சில்வா, தனது படைப்பிரிவு 123,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டதாகவும், மோதலின் முடிவில் சரணடைந்த சுமார் 12,000 விடுதலைப் புலிகளில் 75%க்கும் அதிகமானோர் தனது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகவும் கூறினார்.

சரணடைந்த விடுதலைப் புலிகள் பின்னர் மறுவாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் மீண்டும் இணைக்கப்பட்டனர் என்றும், ஆயுதங்களைக் கைவிட்டவர்கள் மீது இராணுவம் கொண்டிருந்த அணுகுமுறையை இது எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் வாதிட்டார்.

மேலும், ஏராளமான விடுதலைப் புலிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகக் கூறிய ஒரு “சுற்றிவளைப்பு நடவடிக்கையையும்” சில்வா நினைவு கூர்ந்தார்.

இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டவர்களில், ஆயுதத்துடன் பொதுமக்கள் உடையில் இருந்த ஒரு மூத்த விடுதலைப் புலிகளின் வடக்குத் தளபதியும் அடங்கியிருந்ததாக அவர் கூறினார்.

” அதனை ஒரு பொதுமகன் கொல்லப்பட்டார் என்று கூறலாம். இல்லை, அவர் விடுதலைப் புலிகளின் வடக்குத் தளபதி,” என்று கூறிய ஜெனரல் சவேந்திர சில்வா, பொதுமக்கள் உடை அணிந்த போராளிகளைப் பின்னர் பொதுமக்கள் உயிரிழப்புகளாகக் கணக்கிட முடியும் என்றும் வாதிட்டுள்ளார்.

மோதலின் இறுதிக் கட்டங்களில், விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறுவதைத் தடுத்ததாகவும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் இராணுவச் சொத்துக்களை நிலைநிறுத்தியதாகவும் ஜெனரல் சவேந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், போர் குறித்த இராணுவத்தின் தரப்பை அனைத்துலக அளவில் திறம்பட முன்வைப்பதில் அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்கள் தோல்வியடைந்ததாக அவர் விமர்சித்தார்.

இது, சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வெளிநாடுகளில் வலுப்பெற வழிவகுத்ததாகவும் அவர் கூறினார்.

சிறிலங்கா படைகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கங்களும் அனைத்துலக  அமைப்புகளும், குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் நேரடியாகப் பேசி, விளக்கத்திற்காகக் குறிப்பிட்ட சம்பவங்களை முன்வைக்க வேண்டும் என்றும் சவேந்திர சில்வா அழைப்பு விடுத்தார்.

“ஒரு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்,” என்று அவர் கூறினார். “‘இந்தக் குறிப்பிட்ட நாளில், இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் அனைவரும் இதைச் செய்தீர்கள்’ என்று எங்களிடம் கேளுங்கள், அப்போதுதான் நாங்கள் தெளிவுபடுத்த முடியும்.”

“நாங்கள் ஏதேனும் செய்திருந்தால், அதை ஏற்றுக்கொள்வோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

விடுதலைப் புலிகள் பரந்த தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற கூற்றுகளையும் சில்வா நிராகரித்துள்ளார்.

குறைகள் ஆயுத வன்முறை மூலம் அல்லாமல் அரசியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளின் படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த அமைப்பின் அல்லது அதன் ஆதரவாளர்களின் செயல்களுக்காக ஒட்டுமொத்த இன அல்லது மத சமூகங்களையும் குற்றம்சாட்டக்கூடாது என்று வாதிட்டார்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, அதன் கட்டுப்பாட்டிலிருந்து பொதுமக்களை விடுவிப்பதே சிறிலங்கா இராணுவத்தின் நோக்கமாக இருந்தது என்று கூறிய முன்னாள் இராணுவத் தளபதி, சிறிலங்கா படையினர் வேண்டுமென்றே பொதுமக்களுக்கு எதிராக அத்துமீறல்களில் ஈடுபடவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *