இன்று மதியம் கொழும்பு வரும் ராஜ்நாத் சிங்- போக்குவரத்துகளில் மாற்றம்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிறிலங்கா பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் நாள் வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சரும் அவரது குழுவினரும் பயன்படுத்தும் பாதைகளில் அவ்வப்போது போக்குவரத்து தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும் என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரமுகரின் நடமாட்டம் மற்றும் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைப் பொறுத்து இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இந்தியப் பாதுகாப்பு ராஜ்நாத் சிங் இன்று சிறிலங்கா வந்து, கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா விடுதிக்குப் பயணிக்க உள்ளார்.
கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக வளாகம் மற்றும் என்.எஸ்.ஏ. வட்டச்சந்தி ஆகியவற்றின் ஊடாக அவரது பயணம் இடம்பெறும்.
இன்று இரவு 8.00 மணிக்கும் 9.00 மணிக்கும் இடையில், அவர் காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டம் மற்றும் சுதந்திர சதுக்க சுற்றுவட்டம், வழியாக இந்திய இல்லத்துக்கு பயணித்து, பின்னர் ஜே.ஓ.சி. சந்தி மற்றும் பிளவர் வீதி வழியாகத் திரும்ப உள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நாளை காலை 9.50 மணி முதல் 11.25 மணிக்குள் சிறிலங்கா அதிபர் செயலகத்திற்குச் செல்ல உள்ளார்.
பிற்பகல் 2.00 மணி முதல், பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதிப்படையினர் நினைவிடம், பாதுகாப்பு அமைச்சு, நாடாளுமன்ற வளாகம் மற்றும் கங்காராமய விகாரை ஆகிய இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்வார்.
செப்டம்பர் 10 ஆம் நாள் ராஜ்நாத் சிங் நுவரெலியாவிற்குப் பயணம் செய்யவுள்ளார்.
இந்த மூன்று நாள் பயணத்தின் போது, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இந்தத் தற்காலிகப் போக்குவரத்து கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
