மேலும்

தமிழ்த் தேசிய கட்சிகளிடம் இந்திய வெளியுறவுச் செயலர் வாக்குறுதி

மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம்  இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம், இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நேற்று பிற்பகல் 2 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில்  எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம், கவீந்திரன் கோடீஸ்வரன், சாணக்கியன் ஆகியோரும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்  சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் பங்குபற்றினர்.

இதன்போது, தமிழர் தாயகப் பிரதேசத்தில் இன்னமும் விடுவிக்கப்படாமல் சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் பற்றிய விபரங்களை,  இந்திய வெளியுறவுச் செயலர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

சிறிலங்கா இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மக்களால் கைவிடப்பட்டவை என்ற சாரப்பட கருத்துக் கூறப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலர் தமிழ்த் தலைவர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும், சிறிலங்கா அதிபரினாலும் பிற தென்னிலங்கைத் தலைவர்களாலும் அத்தகைய கருத்து கூறப்படுவதாக அறிகின்றோம். ஆனால் அது தவறு.

சம்பந்தப்பட்ட காணிகளை சிறிலங்கா  இராணுவம் ஆக்கிரமித்து நீண்ட காலமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் அந்த மக்கள் வேறு இடமில்லாமல் இடம்பெயர்ந்து இருக்கின்றார்கள்.

சிலர் வெளிநாட்டில் இருக்கின்றார்கள். அதன் காரணமாக அவை கைவிடப்பட்ட காணிகள் என்று கூறுவது அர்த்தமற்றது என்று தமிழ்த் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

மக்கள் குடியிருக்காத தமிழர் தாயக நிலங்களை அபகரிக்க சிறிலங்கா ஆட்சிப்பீடம் முனைகின்றது என்று சுட்டிக் காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஏற்கனவே அரசு அப்படி ஒரு முயற்சியை எடுத்தது, அதை மேற்கொள்ளமாட்டோம் என்று பிரதமர் கூட எமக்கு வாக்குறுதி தந்தார். ஆனால் அதையும் மீறி நிலத்தை சுவீகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட  சந்தர்ப்பத்தில் சுமந்திரன் வழக்குப் போட்டு அந்த முயற்சியை முறியடித்தார் என்று சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், மக்களின் காணிகளை அவர்களிடமே விடுவிக்க வேண்டும் என்பது தங்களுடைய அரசின் தேசிய கொள்கை என்று அறிவிக்கின்றார் சிறிலங்கா அதிபர், ஆனால் மறுநாள் நாடாளுமன்றத்தில்  பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அந்தக் காணிகளை விடுவிக்கமாட்டோம் என்று பிரகடனப்படுத்துகின்றார் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *