சிறிலங்கா அதிபரின் பிரான்ஸ் பயணம் மீண்டும் பிற்போடப்பட்டது
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் பிரான்ஸ் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் வரும் ஜூலை 16-ஆம் திகதி பிரான்சுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
எனினும் இந்தப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
அத்துடன், சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவோ அல்லது பிரெஞ்சு அதிகாரிகளோ இந்தப் பயணத்திற்கான புதிய நாளை அறிவிக்கவில்லை.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் பிரெஞ்சு முதலீட்டை ஊக்குவிப்பது குறித்து பிரெஞ்சு தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு நடத்துவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இந்தப் பயணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டு, பின்னர் பிற்போடப்பட்டிருந்தது.
அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையின் விளைவுகள் உள்ளிட்ட உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாகவே சிறிலங்கா அதிபரின் பிரான்ஸ் பயணம் இந்த ஆண்டின் இறுதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக, சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரெஞ்சு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு புதிய பயண நாள் கோரப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
