மேலும்

சித்திரவதைகள் தொடர்பாக பூச்சிய சகிப்புக் கொள்கை- ஐ.நா குழுவிடம் சிறிலங்கா

தற்போதைய அரசாங்கம் சித்திரவதைகள் தொடர்பாக பூச்சிய  சகிப்புக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றுவதாக சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சித்திரவதை தடுப்புக்கான ஐ.நா உபகுழுவிடம்  தெரிவித்துள்ளார்.

சித்திரவதைகளை தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவின் நான்கு பேர் கொண்ட  சிறப்புக் குழுவொன்று, நேற்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும்  24 ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கவுள்ள இந்தக் குழுவினரை  நேற்று வெளிவிவகார அமைச்சில்  சந்தித்த போதே, அமைச்சர்  விஜித ஹேரத்,  இதனைக் குறிப்பிட்டுள்ளாார்.

தற்போதைய அரசாங்கம் சித்திரவதை தொடர்பாக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடுமையாக பின்பற்றுகிறது.

இந்தக் கொள்கையை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு ஏற்கனவே ஏராளமான சட்டமன்ற, நிர்வாக மற்றும் நிறுவன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்களில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

ஒன்பது முக்கிய அனைத்துலக மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் சிறிலங்கா  ஒரு அரச தரப்பாக விளங்குகிறது.

தன்னார்வமாக மேற்கொள்ளப்படும் கடமைகளுக்கு இணங்குவதை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை இந்தப் பயணம் தெளிவாக பிரதிபலிக்கிறது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும், நல்லாட்சியை வலுப்படுத்துவதிலும் அரசாங்கம் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை கொண்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் இந்த உபகுழுவுடன் திறந்த, முற்போக்கான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படும் .

அரசியலமைப்பிற்கு இணங்க  அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழு ஆதரவையும் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

ஐ.நா உபகுழுவுடனான கலந்துரையாடலில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள், அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *