மோடியின் தனிப்பட்ட செய்தியை அனுரவிடம் கையளிப்பார் ஜெய்சங்கர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு எடுத்து வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நாளை உயர்மட்டக் குழுவுடன் கொழும்பு வரவுள்ளார்.
அவர், நாளைமறுநாள் செவ்வாய்க்கிழமை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார் திசாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது குறித்து பேச்சு நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இருதரப்பிற்கும் இடையில் பரந்துபட்ட கலந்துரையாடல்களும் நடத்தப்படவுள்ளதாக மூத்த அரசாங்க வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
