சிறிலங்காவில் அதிகம் செலவிடும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள்
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளே சிறிலங்காவில் அதிகம் செலவிடுபவர்கள் என, ஆய்வில் வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு சராசரியாக 209 அமெரிக்க டொலர்கள் செலவிடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
அவர்கள், ஒரு நாளைக்கு 154.82 முதல் 263.28 டொலர்கள் வரை செலவிட்டுகின்றனர்.
ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு 142.27 முதல் 222.82 டொலர்கள் வரையும்- சராசரியாக 182.55 டொலரும் செலவிடுகின்றனர்.
மூன்றாமிடத்தில் உள்ள ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு 163.84 முதல் 201.95 டொலர்களையும், சராசரியாக 182.90 டொலர்களையும் செலவிடுவதாக தெரியவந்துள்ளது.
சீன சுற்றுலாப் பயணிகள் 155.17 முதல் 190.55 டாலர்கள் வரையும்- சராசரியாக 172.86 டொலர்களையும் செலவிடுகின்றனர்.
ஐந்தாமிடத்தில் உள்ள இந்திய சுற்றுலாப் பயணிகள் 154.60 முதல் 176.49 டொலர்கள் வரையும் – சராசரியாக 165.55 டொலர்களையும் செலவிடுகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் சுற்றுலாத்துறை மூலம் கிட்டத்தட்ட 3,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
