இன்று கொழும்பு வருகிறார் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிசன் ஹூக்கர் (Allison Hooker) இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
உதவி இராஜாங்க செயலர் ஹூக்கர் சிறிலங்கா சகாக்களை சந்தித்து, பொருளாதார மற்றும் வணிக உறவுகளை ஆழப்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் சிறிலங்காவின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார் என்று, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், தெரிவித்துள்ளது.
பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் செழிப்புக்கான எங்கள் பரஸ்பர உறுதிப்பாட்டில் வேரூன்றிய வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மையை அமெரிக்காவும் சிறிலங்காவும் பகிர்ந்து கொள்கின்றன.
பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம், சுதந்திரமான, திறந்த மற்றும் மீள்தன்மை கொண்ட இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை முன்னேற்ற நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுகிறோம் என்றும் சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
