மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்கா அதிபருக்கு அவசர கடிதம்
பேரிடரைத் தொடர்ந்து நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகள் குறித்து கவலை தெரிவித்து, சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்கா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பேரிடர் மற்றும் மீட்பு சவால்களின் அளவை ஒப்புக்கொண்டாலும், அவசரகாலச்சட்டத்தின் பல விதிகள், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் தரநிலைகளுக்கு முரணானவை என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது
சொத்துக்களைக் கோருவதற்கான பரந்த அதிகாரங்கள், கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 365 மற்றும் 365ஏ என்பனவற்றைச் சேர்ப்பது, காவல்துறை ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்வது மற்றும் மரண தண்டனைகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் பிரச்சினைக்குரியவையாக உள்ளதாக, அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக இந்த விதிமுறைகள் பயன்படுத்தலாம் என்று கூறப்படும் அறிக்கைகள் குறித்தும், மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையை எழுப்பியுள்ளது.
பல விதிமுறைகளை ரத்து செய்தல் அல்லது திருத்துதல், மரண தண்டனை பற்றிய குறிப்புகளை நீக்குதல், காவல்துறை அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிரான பாதுகாப்புகளை உறுதி செய்தல், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக அவசரகால ஒழுங்குமுறைகளை மாற்றியமைத்தல் உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகளையும், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
