950 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் 4 கப்பல்கள் புறப்பட்டன
டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தமிழக அரசின் அவசர நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று புறப்பட்டுள்ளது.
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக 650 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் மற்றும் துணிகளை ஏற்றிக் கொண்டு ஐஎன்எஸ் காரியல் ( INS Gharial) என்ற கப்பல் இன்று காலை சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரில் 950 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்கள் சிறிலங்காவிற்கு அனுப்பப்படுகிறது.
இன்று காலை சென்னை துறைமுகத்தில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த உதவிப் பொருட்களை சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதுவர், கேதீஸ்வரன் கணேசநாதனிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழக அரசின் அதிகாரிகள் மற்றும் சிறிலங்கா துணை தூதரக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதேவேளை தமிழக அரசின் 300 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, இந்திய கடற்படையின் LCU-51, LCU-54, LCU- 57 ஆகிய தரையிறங்கு கலங்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளன.


