மேலும்

எப்போது மாகாண சபைத் தேர்தல் என்று சிறிலங்கா அதிபர் கூறவில்லை

எப்போது மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் எதையும் கூறவில்லை என, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் நேற்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் முதலாவதாக தெரிவித்த விடயம், புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும்; அதற்கான பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து புதிய அரசியலமைப்பு துரிதமாக நடைமுறைக்கு வரும் என்பதேயாகும.

ஆனால் பதவியேற்று ஒரு வருடமாகியும் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை சிறிலங்கா அதிபரிடம் எடுத்துக் கூறினோம்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக சிறிலங்கா அதிபர் எம்மிடம் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், அவரது தேர்தல் அறிக்கையில், ஓராண்டுக்குள் மாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சி தேர்தலும் நடத்தப்படும் என்று உள்ளது.

இது தொடர்பாகவும் நாம் அவரிடம் கேட்டிருந்தோம்.

அதற்கு  உள்ளூராட்சி தேர்தலை நடத்திவிட்டோம். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சொற்ப காலங்கள் உள்ளது. ஆனால் நாம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்ற உறுதிமொழியை எமக்கு வழங்கினார்.

எப்போது மாகாண சபைத் தேர்தல் என்று சொல்லவில்லை.

மாகாணத்தில் இருந்து அதிகாரங்கள் பறித்தெடுக்கப்படக் கூடாது  என்பது தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் எமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

அவர் அனைத்தையும் செவிமடுத்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் எம்முடன் கலந்துரையாடினார்.

முக்கியமான பல விடயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளன.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சி என்ற ரீதியில் தொடர்ந்து எம்முடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அதிபர் உறுதியளித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் பேசியுள்ளோம். அதில் கவனம் செலுத்துவதாகவும் எம்மிடம் தெரிவித்தார்.

திருகோணமலை புத்தர் சிலை தொடர்பிலும் நாம் எடுத்துரைத்துள்ளோம்.

இதை வைத்து இனவாதத்தை தூண்டுவதற்கு அனைத்துப் பகுதிகளிலும் பலர் உள்ளனர்.

கடந்த இரு நாட்களிலும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பௌத்த தேரர்கள் குறித்த பகுதிக்கு சென்று பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாட்டுக்கு இடம்கொடுக்கக் கூடாதென்பது எங்களது திடமான கருத்து.

ஆனால் அதேவேளையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் விகாரைகளை அமைத்து ஆதிக்கத்தை காட்டுவது இனங்களுக்கிடையில் எவ்விதமான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை நாம் சிறிலங்கா அதிபரிடம் எடுத்துக் கூறியுள்ளோம் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *