இந்திய புலனாய்வு தகவல்- தமக்கு தெரியாதென சிறிலங்கா கைவிரிப்பு
இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவுடன் விடுதலைப் புலிகளின் எச்சங்களாக உள்ள சிலர் இணைந்து செயற்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து தமக்குத் தெரியாது என சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்களுக்கும் இடையிலான புதிய கூட்டணியை இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த தகவல் குறித்து தனக்குத் தெரியாது என்றும், போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் ஏற்கனவே ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
“இந்த விடயம் குறித்து எனக்குத் தெரியாது. இருப்பினும், போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராட நாங்கள் ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
எனவே, ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை நடந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
காவல்துறைக்கு இந்தத் தகவல் கிடைத்திருக்கலாம், அவர்கள் அதன்படி செயற்படுவார்கள்.”என்றும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்ட சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் காரணமாக மேற்கு மற்றும் வட இந்தியாவில் தாவூத் இப்ராஹிம் குழு பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளதாக எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிகளைத் தேடி, இந்தக் குழு தற்போது தமிழ்நாடு மற்றும் சிறிலங்கா முழுவதும் விடுதலைப் புலிகளின் பழைய கடத்தல் வலையமைப்பைப் பயன்படுத்தி போதைப்பொருள்களைக் கொண்டு செல்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
