சிறிலங்கா- ரஷ்ய படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு
சிறிலங்கா இராணுவம் மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு இடையிலான கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயப் பயிற்சியான, “வூல்வரின் பாதை 2025” (Wolverine Path 2025) கடந்த 4ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.
மாதுருஓயாவில் உள்ள இராணுவப் பயிற்சிப் பாடசாலையில், இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெற்று வந்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது களப் பயிற்சி ஒத்துழைப்பு இதுவாகும்.
இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. டோலகே நிறைவு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பயங்கரவாத எதிர்ப்புத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தந்திரோபாயப் பயிற்சிகள், களக் காட்சிகள் மற்றும் உருவகப்படுத்துதல்கள் மூலம் இயங்குதன்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
இறுதி தந்திரோபாய நடவடிக்கைப் பயிற்சியைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் இரு நாடுகளிலிருந்தும் பங்கேற்பாளர்கள் அவர்களின் விதிவிலக்கான செயல்திறனுக்காகப் பாராட்டப்பட்டனர்.
நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.
ரஷ்ய ஆயுதப்படைகளின் மேஜர் ஜெனரல் அண்ட்ரே போரிசோவிச் கோஸ்லோவ் (Major General Andrey Borisovich Kozlov), சிறிலங்காப் படையினரின் தொழில்முறையைப் பாராட்டியதுடன், இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதில் பயிற்சியின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்தநிகழ்வில் இராணுவத்தின் பிரதித் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம். யஹம்பத், சிறிலங்கா இராணுவத் தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் பி. பிரேமரத்ன, மற்றும் மூத்த அதிகாரிகள்,படையினர் கலந்து கொண்டனர்.





