முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரிக்கு எதிராக புதிய ஆதாரங்கள் முன்வைப்பு
சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், றியர் அட்மிரல் சரத் மொஹோட்டியின், பிணை மனு மீதான, தீர்ப்பு வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என குருநாகல மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, றியர் அட்மிரல் சரத் மொஹோட்டியின் பிணை மனுவை பொல்கஹவெல நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மேல்நீதிமன்றத்தில் பிணைமனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை குருநாகல மேல்நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்தது.
இதன்போது, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான றியர் அட்மிரல் சரத் மொஹோட்டியை, பிணையில் விடுவிப்பதற்கு, குற்றப் புலனாய்வுத் துறையினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பொதுஹரவில் போருக்குப் பின்னரான காலத்தில் ஒருவர் காணாமல் போனது தொடர்பாக புதிய, தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, தெரிவித்து குற்றப் புலனாய்வுத் துறையினர், அவற்றை எழுத்துபூர்வமாக மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த வழக்கில், றியர் அட்மிரல் சரத் மொஹோட்டி கைது செய்யப்பட்ட பல வாரங்களுக்குப் பின்னர், இதே வழக்கில் கைது செய்யப்பட்டு 70 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன பிணையில் விடுவிக்கப்பட்டார்.
