ஐ.நாவிடம் இருந்து சிறிலங்கா கடற்படைக்கு செய்மதி தொடர்பு இடைமறிப்பு கருவி
சிறிலங்கா கடற்படைக்கு ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்ற அலுவலகத்திடம் இருந்து, ‘கொங்னைட் S12’ (Congnyte S12) என்ற செய்மதி தொடர்பு இடைமறிப்பு கருவியை பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி மற்றும் ஜப்பானிய கடலோர காவல்படையின் சிறப்பு உதவியுடன், “இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சட்ட விதிகளை வலுப்படுத்துதல்” என்ற திட்டத்தை ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்ற அலுவலகம் (UNODC) செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், சிறிலங்கா கடற்படைக்கு ‘காங்னைட் S12’ என்ற செய்மதி தொடர்பு இடைமறிப்பு கருவியை வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கருவியைப் பெற்றுக் கொள்வதற்காக ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்ற அலுவலகத்துடன், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, இறுதி பயனர் மற்றும் ஒப்படைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவையில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் முன்வைத்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
