மேலும்

மூடப்படுகிறது பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம்- ட்ரம்ப் அரசு முடிவு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும், பணியகங்களை மூடுவதற்கு டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ, கடந்த செவ்வாயன்று, இராஜாங்கத் திணைக்களத்தில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ் உள்ள பல பணியகங்களை மூடுவதற்கம், அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நீக்கப்படவுள்ள பதவிகளில், சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான உதவிச் செயலர் பதவியும் ஒன்றாகும்.

இதன் கீழ் செயற்பட்டு வந்த சில பிரிவுகளை வெளியுறவு மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரிவின் கீழ் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இதன் கீழ் செயற்பட்டு வந்த பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தை மூடவுள்ளதாகவும் ட்ரம்ப் அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியாக போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து, இந்தப் பணியகம் அமெரிக்க இராஜாங்கச் செயலருக்கும், சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான உதவிச் செயலருக்கும் பரிந்துரைகளை முன்வைக்கும் பணியை மேற்கொண்டு வந்தது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் , இனப்படுகொலைகள் பற்றிய தகவல்களைத் திரட்டுவது மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளை எடுப்பதில் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *