மீண்டும் காற்றழுத்தம் – பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலை
நாட்டில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவ மையம் என்பன அறிவித்துள்ளன.
அந்தமான் தீவுகளுக்கு அருகில் புதிய காற்றுச் சுழற்சி உருவாகியுள்ளதாகவும், அது சிறிலங்காவின் தென்கிழக்கு கரையோரமாக நகர்ந்து, காற்றழுத்தமாக மாறும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில், 50 மிமீ முதல் 75 மிமீ வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படுத்தவில்லை, ஆனால் அவசரகால சூழ்நிலை ஏற்பட்டால், நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
பேரிடர் முகாமைத்துவ மையம் தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாகவும், திடீர் அவசரநிலைகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
