மேலும்

போதிய ஆதாரங்கள் இல்லாததால் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு, முறையற்ற மருத்துவ காப்புறுதி ஒப்பந்தம் மூலம் 4.7 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க நேற்றுக்காலை கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட அவரை, கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம, பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்துள்ளது.

இந்தக் குற்றம் சட்டப்படி பிணையில் வெளிவர முடியாதது என்றாலும், குற்றச்சாட்டுகளை நிறுவ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்னும் போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிவான்  குறிப்பிட்டார்.

சாட்சிக்கு மிரட்டல் விடுத்ததாக புலனாய்வாளர்கள் வாய்மொழியாகக் குற்றம்சாட்டிய போதிலும், அதிகாரப்பூர்வ பி அறிக்கையில்  அது சேர்க்கப்படவில்லை என்றும் நீதிவான் சுட்டிக்காட்டியிருந்தார்.

பிரசன்ன ரணதுங்க நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது, நாமல் ராஜபக்ச, உதய கம்மன்பில, அனுர பிரியதர்சன யாப்பா, துமிந்த திசாநாயக்க, மற்றும் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சமூகமளித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *