கோத்தாவை சந்தித்தார் இந்திய தூதுவர்
சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்று மாலை அவரைச் சந்தித்தார்.
கோத்தாபய ராஜபக்சவை, நுகேகோட மீரிஹானவில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று இந்தியத் தூதுவர், சந்தித்திருந்தார்.
இந்திய தூதுவருடனான சந்திப்பிக் முக்கியத்துவம் என்ன என்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கோத்தாபய ராஜபக்ச, சாதாரணமாக சந்தித்தேன் என்று மாத்திரம் குறிப்பிட்டார்.
இந்தியா, சீனாவுடனான உறவுகளுக்கு சிறிலங்கா எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோத்தாபய ராஜபக்ச, “மிகவும் முக்கியம், இந்தியாவும் சீனாவும், எமது அயல் நாடுகள், எப்போதும் எமது நீண்டகால நண்பர்களாகவும் உள்ளன” என்று குறிப்பிட்டார்.
யாருக்கு கூடுதல் முக்கியத்துவம் என்று எழுப்பிய கேள்விக்கு அவர், இரண்டுமே முக்கியமானவை தான். எல்லா நாடுகளும் முக்கியம் தான். ஆனால் இந்தியா எமது அயல் நாடு என்று பதிலளித்தார்.
இந்தியா அயல் நாடு, சீனா பற்றி என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கோத்தாபய ராஜபக்ச, சீனா பொருளாதார பங்காளி என்று குறிப்பிட்டார்.