மேலும்

குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன?

கடத்தப்பட்டு  தாக்கப்பட்ட  ‘த நேசன் நாழிதழின் முன்னாள் துணை ஆசிரியர் கீத் நொயர் வழக்கு மற்றும்  ‘த சண்டே லீடர்  வாரஇதழின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையால் கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய சாட்சியமானது, ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னர் சேகரிக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

கடந்த வாரம் டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய போதே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார். தமது ஆட்சியின் போது இவ்விரு வழக்கு விசாரணைகள் தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இவ்விரு சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் எவ்வித காலதாதமுமின்றி சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச தனது நேர்காணலில் தெரிவித்தார்.

இவ்விரு குற்றச் செயல்களுடனும் தொடர்புபட்ட குற்றவாளிகளை அடையாளங் காண்பதற்கான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்துப் புலனாய்வு அமைப்புக்களிடமும் தான் கட்டளையிட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பாக லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை மற்றும் நொயர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விரு வழக்குகள் தொடர்பான சாட்சியங்களைத் ராஜபக்ச அரசாங்கமே கண்டுபிடித்ததாகவும், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தற்போதைய ஆட்சிக்காலத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டார்.

‘குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் எவற்றையும் கண்டுபிடிக்கவில்லை. தற்போது காணப்படும் அனைத்துச் சாட்சியங்களும் எமது ஆட்சிக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். நாங்கள் கண்டுபிடித்த ஆதாரத்தை தாம் கண்டுபிடித்ததாகவும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திரிபுபடுத்துகின்றனர்’ என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்தார்.

தற்போது கல்கிசை நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முக்கிய சாட்சியத்தைப் பெறுவதற்கான ஆரம்ப கட்ட கட்டளையைத் தான் தனிப்பட்ட ரீதியாக வழங்கியதாகவும் இச் சாட்சியத்தைப் பயன்படுத்தியே லசந்த விக்கிரமதுங்க மற்றும் கீத் நொயர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்ததாகவும் ஆனால் தற்போது  இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையினர் தாம் தப்பிப்பதற்காக தன் மீது பழிசுமத்துவதாகவும் கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

‘குற்றப் புலனாய்வுத் துறையினர் சந்தேகநபர்களைக் கைதுசெய்ததுடன் கோத்தபாய ராஜபக்சவின் பெயரை நீங்கள் கூறினால் நீங்கள் விடுதலை செய்யப்படுவீர்கள் என சந்தேகநபர்களிடம் தற்போது கூறுகின்றனர்’ என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் சானி அபேயசேகர பின்வருமாறு விளக்கமளித்தார். ‘தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் குற்றவியல் விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் கருத்துக் கூறாது. இவ்வழக்கு விசாரணைகள் தொடர்பான சாட்சியங்கள் சட்ட நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குற்றவியல் வழக்கு விசாரணைகள் தொடர்பான நடைமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்படும்.

நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் சாட்சியங்களில் பெரும்பாலானவை பொதுமக்களின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கு மற்றும் கீத் நொயர் கடத்தப்பட்ட வழக்குத் தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் முறையே B 92/2009  B 1535/2008என்கின்ற வழக்கு இலக்கங்களின் கீழ் கல்கிசை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

2008-2014 காலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நீதிமன்றில் இதுவரை சமர்ப்பிக்கப்படாத எந்தவொரு ஆதாரங்களையும் குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை’ என இயக்குநர் சானி அபேயசேகர தெரிவித்தார்.

கோத்தபாய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக சானி அபேயசேகரவிடம் வினவியபோது, ‘குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பான புதிய ஆதாரங்களையே குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றில் தற்போது சமர்ப்பிக்கின்றனர்’ என இயக்குநர் அபேயசேகர தெரிவித்தார். ஆனால் இது தொடர்பாக கோத்தபாய ராஜபக்சவிடம் நேரடியாகப் பதிலளிப்பதற்கு அபேயசேகர மறுத்துவிட்டார்.

ஆனால் அவர் தனது அறிக்கையில் ‘தற்போதைய அல்லது முன்னர் திரட்டப்பட்ட ஆதாரங்களை குற்றவியல் விசாரணைக்காக காவற்துறையிடம் வழங்க வேண்டிய சட்டக்கடப்பாடு காணப்படுகிறது. இது தொடர்பான சாட்சியங்களை காவற்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு இவ்வாறான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

இவ்வாறான வழக்குகள் தொடர்பான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கொண்டுள்ள பொதுமக்கள் மற்றும் தற்போதைய அல்லது பழைய அதிகாரிகள் தாம் வைத்திருக்கும் ஆதாரங்களை குற்றப் புலனாய்வுத் துறையிடம் சமர்ப்பிக்குமாறும் இதன்மூலம் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய முடியும் எனவும் இவ்வாறான இரகசியத் தகவல்களை சட்டத்தின் பிரகாரம் வழக்கு விசாரணைகளுக்காகப் பகிர்ந்து கொள்ள முடியும் எனவும் நாங்கள் இன்றும் கூட கோரிக்கை விடுத்து வருகிறோம்’ என அபேயசேகர தெரிவித்தார்.

இவ்விரு வழக்குகள் தொடர்பாகவும் நீதிமன்றில் 2008 தொடக்கம் இற்றை வரை சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவால் சுட்டிக்காட்டப்பட்ட எந்தவொரு ஆதாரத்தையும் ‘டெய்லி மிறர்’ ஊடகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கு விசாரணைகள் மீண்டும் சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் 2016ல் தொடரப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

கீத் நொயர் வழக்குத் தொடர்பாக தன்னிடமிருந்த அனைத்துத் தகவல்களையும் கடந்த ஆண்டு குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்ததாகவும், நீதிமன்றில் எந்தெந்தத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைக் காவற்துறையினர் தீர்மானிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாகவும், கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். ‘நான் குற்றப் புலனாய்வுத் துறையிடம் சாட்சியம் வழங்கிய போது தகவல்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டிருந்தேன். ஆனால் இந்த விவகாரமானது அவர்களுக்கு அப்பாலானது.

அவர்கள் நீதிமன்றில் ‘பி’ அறிக்கையைச் சமர்ப்பிக்கும் போது நீதிபதியிடம் எதைக் கூறவேண்டுமோ அதை மட்டுமே வழங்க வேண்டும்.  அவர்கள் முழுமையான தகவல்களையும் வழங்கக் கூடாது. இது அநீதியான செயலாகும். அத்துடன் எனக்கு எதிராக ஊடகங்களிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தனர்’ என கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

சிறிலங்கா அரசால் வெளியிடப்படும் பத்திரிகை ஒன்றில் நொயர் வழக்குத் தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட பத்தியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் குறித்த ஊடகத்திடம் வழங்கப்பட்ட அனைத்துத் தகவல்களும் பெரிய எழுத்துக்களில் சேர்க்கப்பட்டிருந்தன. இவ்வாறான ஒரு செயலை குற்றப் புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டமை அநீதியானதாகும். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிபதியிடம் ‘B’ அறிக்கையைச் சமர்ப்பிக்கும் போது தமக்குத் தேவையான விடயத்தை மட்டுமே கூறவேண்டும்.

முதலில் இவர்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இவர்கள் முழுத் தகவல்களையும் வழங்குவதன் மூலம் உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக அப்பாவிப் பொதுமக்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனால் உண்மையான குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது’ என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

மே 2008ல் கீத் நொயர் கடத்தப்பட்டமை மற்றும் வைத்ய வீதி, தெகிவளையில் அமைந்திருந்த அவரது வீட்டிற்கு வெளியே வைத்து நொயர் தாக்கப்பட்டமை தொடர்பாக கடந்த ஆண்டு குற்றப் புலனாய்வுத் துறையினரால் தற்போதைய மற்றும் முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேஜர் பிரபாத் புலத்வத்த, லான்ஸ் கோப்ரல் ஹேமச்சந்திரா பெரேரா, கோப்ரல் துமிந்த வீரரட்ன, கோப்ரல் லசந்த விமலவீர,  மற்றும் இராணுவச் சிப்பாய் நிசாந்த ஜயதிலக, லான்ஸ் கோப்ரல் நிசாந்த குமார மற்றும் கோப்ரல் சந்திரபால ஜயசூரிய ஆகியோர் கடந்த ஆண்டு கீத் நொயர் வழக்கு சந்தேகநபர்களாகக் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை கல்கிசை  நீதிமன்றில் முன்நிறுத்திய போது, கீத் நொயர் கடத்தப்படுவதற்கு முன்னர் சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் கொழும்பில் நடமாடியதைக் கண்காணித்தமை தொடர்பான தொலைபேசி அழைப்புப் பதிவுகளை குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றில் சமர்ப்பித்தனர். இதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு தொம்பே என்ற இடத்திலிருந்த இரகசிய வீடொன்றுக்கு இடம்மாற்றப்பட்டார்.

குறித்த வீடு அமைந்துள்ள பகுதிக்கு குற்றப் புலனாய்வுத் துறையினர் நேரில் சென்ற போது கீத் நொயர் கடத்தப்பட்ட வழக்குடன் சம்பந்தப்பட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வீட்டு உரிமையாளருடன் வாடகை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமைக்கான ஆதாரத்தைத் திரட்டினர். இவ்விரு சந்தேகநபர்களுள் மேஜர் புலத்வத்தே ஒருவராவார்.

வாராந்த புலனாய்வு ஒன்றுகூடல்கள்:

விக்கிரமதுங்க மற்றும் நொயர் உட்பட பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொள்வதுடன் இது தொடர்பான அறிக்கைகளை தன்னிடமும் தனது தேசிய புலனாய்வுப் பொறுப்பதிகாரி ஹெந்தவிதாரணவிடமும் சமர்ப்பிக்குமாறு புலனாய்வு அமைப்பின் பொறுப்பதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். இதற்கான சிறப்பு ஒன்றுகூடல்கள் வாராந்தம் பாதுகாப்பு அமைச்சில் ஒழுங்கு செய்யப்பட்டன.

தனது பதவிக்காலத்தில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியவற்றுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் பிரதி காவல்துறை மாஅதிபர் சந்திர வகிஸ்ரவிடமிருந்தும் அப்போதைய குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுப் பொறுப்பதிகாரியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடமிருந்தும், ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான தகவல்கள் மற்றும் சாட்சியங்களைப் பெற்றுக்கொண்டதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

‘ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இடம்பெறும் இவ் ஒன்றுகூடல்களில் பொறுப்பதிகாரிகள் தம்மிடம் கொண்டுள்ள சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைப்பார்கள்’ என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பாக முன்னாள் தேசிய புலனாய்வுப் பொறுப்பதிகாரி ஹெந்தவிதாரணவிடம் வினவியபோது, ‘இக்குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு புலனாய்வு அமைப்புக்களுக்கு பாதுகாப்புச் செயலர் கட்டளை வழங்கியதுடன் இவை தொடர்பான அறிக்கைகளை பாதுகாப்புச் செயலரிடமும் என்னிடமும் வழங்குமாறு கூறப்பட்டிருந்தது’ என அவர் தெரிவித்தார்.

‘இவ்வாரந்த ஒன்றுகூடலுக்கு குற்றப் புலனாய்வுத் துறை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, அரச புலனாய்வுத் துறை மற்றும் இராணுவப் புலனாய்வுத் துறை ஆகியவற்றின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். சிலவேளைகளில் இராணுவப் படைகளின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்’ என ஹெந்தவிதாரண தெரிவித்தார்.

இவ்விசாரணைகளிலிருந்து எவ்வாறான முடிவுகள் எட்டப்பட்டன என்பதை ஹெந்தவிதாரணவால் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்த அதேவேளையில், இது தொடர்பில் யார் மீது பழிசுமத்துவது என்பதிலும் கோத்தபாய ராஜபக்ச தெளிவற்றுக் காணப்பட்டார் என புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கைகளிலிருந்து அறியமுடிகிறது.

‘சரத் பொன்சேகவே இவ்வாறான குற்றங்களுக்கு மூலகாரணம் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்’ என முன்னாள் பாதுகாப்புச் செயலர் குற்றம் சுமத்தினார். இவ்வாறான குற்றங்களுக்கு சரத் பொன்சேகவே காரணமாக இருந்தார் என்பதை கோத்தபாய உறுதியாக அறிந்த போதிலும் அவர் இவ்வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு சரியான சாட்சியங்களைப் பெறுவதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்திருந்தார் என கோத்தபாய தெரிவித்தார்.

இது தொடர்பில் பாதுகாப்புச் செயலர் என்ற வகையில் தான் நடவடிக்கை எடுக்காமைக்கு காரணம் இதன் மூலம் தான் அரசியல் நலனைப் பெற்றுக் கொள்ள விரும்பாமையே என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கோத்தபாய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் வினவிய போது, ‘ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் குறித்த சாட்சியங்களில் தான் சம்பந்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெறாத போதிலும், 2010 ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலின் பின்னர் என் மீது அரசியல் பழிவாங்கலை மேற்கொள்வதற்காக கோத்தபாய ராஜபக்ச என்னை சிறையில் அடைத்திருந்தார்’ என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

‘கோத்தபாய ராஜபக்ச, சுயமரியாதை மிக்க ஒருவராக இருந்திருந்தால், அவர் தைரியமாக உண்மையைக் கூறியிருக்க வேண்டும். அவர் என் மீது குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக தனக்குத் தெரிந்த தகவல்களை குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்திருக்க வேண்டும்.

கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கு காவற்துறையினர் நெருங்கிய போது, அவர் தனது சட்டவாளர்களை உயர் நீதிமன்றுக்கு விரைந்து அனுப்பி தான் கைது செய்யப்படுவதைத் தடுத்திருந்தார். அன்றைய தினம் என் மீது குற்றம் சுமத்தப்பட்ட போது, நான் ஒரு கோழையைப் போலல்லாது சிங்கத்தைப் போன்று நான் என்னைப் பாதுகாத்துக் கொண்டேன்’ என பொன்சேகா குறிப்பிட்டார்.

(தொடரும்)

வழிமூலம்        – daily mirror
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *