மேலும்

கீத் நொயார் கடத்தல் – சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்று கல்கிசை நீதிமன்றத்தில் நீதிவான் லோசன அபேவிக்கிரம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டவாளர்கள், போர்க்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீதே பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டது என்றும் எனவே அவரும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சரத் பொன்சேகாவிடம் ஏற்கனவே வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

எனினும், சரத் பொன்சேகா முறைப்படி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் சட்டவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்ட நீதிவான், தேவைப்பட்டால் அடுத்த விசாரணையின் போது,  அதனை சுருக்கமாக வெளிப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறும் உத்தரவிட்டார்.

அதேவேளை இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை எதிர்வரும் 16ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *