மேலும்

மாலிக்கு அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் தொகை கால்வாசியாக குறைப்பு

sri-lanka-armyமேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்குவைடா உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் அதிகளவில் செயற்படும், மாலியின் வடக்குப் பகுதியில் ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா இராணுவத்தின் 800 பேர் கொண்ட பற்றாலியன் ஒன்றை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

மாலியில் நிறுத்தவுள்ள படையினருக்குத் தேவையான வெடிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதியை ஒதுக்கீடு செய்வதில், நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள தாமதங்களாலேயே, சிறிலங்கா படையினரின் எண்ணிக்கையை 200 பேராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாலிக்கு அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவத்தினருக்காக ஆயுதங்கள், வெடிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்ட போதும் நிர்வாக பணிகளால் தாதமம் ஏற்பட்டுள்ளது.

இதனால், எகிப்திய இராணுவ பற்றாலியன் ஒன்றை மாலிக்கு ஐ.நா அனுப்பியுள்ளது. இதையடுத்து, 200 அதிகாரிகள் மற்றும் படையினரைக் கொண்ட கொம்பனி ஒன்றை மாத்திரமே மாலிக்கு சிறிலங்கா இராணுவம் அனுப்பவுள்ளது.

மாலிக்கு அனுப்புவதற்காக தெரிவு செய்யப்பட்ட படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு குகுலேகங்கையில் உள்ள அமைதி நடவடிக்கை உதவி பயிற்சி நிறுவகத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேவேளை, இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, மாலிக்கு அனுப்பப்படவுள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்றும், பகுதி பகுதியாகவே அவர்கள் அனுப்பப்படுவர் என்றும் தெரிவித்தார்.

தற்போது மாலியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர், கண்காணிப்பு ஆற்றலை மட்டுமே கொண்டவர்களாக உள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *