மேலும்

புலிச் சந்தேகநபரைச் சுட்டுக்கொன்ற மேஜருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு?

Sri_Lanka_Army_Flagவிடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்தும், 2 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் தர அதிகாரிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

1998ஆம் ஆண்டு பருத்தித்துறை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவரை, லெப். விமல் விக்கிரமகே என்ற அதிகாரி சுட்டுக் கொன்றார். சந்தேக நபர் கைவிலங்கிடப்பட்டிருந்த நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றது.

எனினும், சந்தேக நபர் தப்பிச் செல்ல முயன்ற போதே, தவறுதலாகச் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றே விமல் விக்கிரமகேக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போது, மேஜர் வரை பதவி உயர்வு பெற்ற விமல் விக்கிரமகே ஓய்வு பெற்றிருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு 2 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேஜர் விமல் விக்கிரமகே இழப்பீட்டைச் செலுத்துவதற்கு உதவும் வகையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி, நிதிசேகரிக்கும் பரப்புரை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

எனினும், மேஜர் விமல் விக்கிரமகே சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பைக் கோரவே, இழப்பீட்டைச் செலுத்துமாறு இராணுவத்தைக் கோரவோ இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேஜர் விமல் விக்கிரமகே இராணுவத்தில் பணியாற்றிய போது, சேவையில் நல்ல பதிவுகளைக் கொண்டிருந்தவர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *