மேலும்

‘வடக்கு கிழக்கை இணைக்கக்கூடாது’ – கிழக்கு முஸ்லிம் சிவில் சமூகம்

muslimsபுதிய அரசியலமைப்பின் கீழ் அதிகாரங்களைப் பகிரும் போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று, கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் வலியுறுத்தியுள்ளது.

கிழக்கின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டம் நேற்றுமுன்தினம் கல்முனையில் இடம்பெற்ற போது, வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்ப் பேசும் மக்களின் கலாசார தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் மக்கள் உதவ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த ஞாயிறுக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதையடுத்தே, கல்முனையில் நடந்த கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகத்தின் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர், மௌலவி நதீர், இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், வடக்கில் உள்ள சகோதரர்களிடத்தில் இருந்து கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் கலாசார மற்றும் சமூக அடையாள ரீதியாக வேறுபடுகிறார்கள். எனவே வடக்கு, கிழக்கு இணைப்பு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

கிழக்கு மாகாணத்தில், 39 வீதம் தமிழர்களும், 37 வீதம் முஸ்லிம்களும் இருக்கின்றனர். இரண்டு மாகாணங்களையும் இணைத்தால், முஸ்லிம்களின் சனத்தொகை 17 வீதமாக குறைந்து விடும்.

கிழக்கு மாகாணத்தின் வரலாறு தனியான மாகாணமாகவே இருந்து வந்திருக்கிறது. 1987இல் இந்திய- சிறிலங்கா உடன்பாட்டுக்குப் பின்னர் தான் நிலைமை மாறியது.

இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்டிருந்த 20 ஆண்டுகால அனுபவத்தின் படி, நாம் சமஸ்டி ஆட்சியை எதிர்க்கிறோம். ஏனென்றால் அதிகாரம் பகிரப்படும் போது நாம் சிறுபான்மையினராகி விடுவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *