மேலும்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பலம் பெற்றுள்ள சிறிலங்கா ஆதரவு அணி – தமிழருக்குப் பின்னடைவு

parliament-ukபிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகள் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தோற்கடிக்கப்பட்டுள்ளதானது, சிறிலங்காவுக்கு நல்ல செய்தி என்று சிறிலங்காவுக்கான கொன்சர்வேட்டிவ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த அமால் அபேகுணவத்தன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், முன்னைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த விடுதலைப் புலிகள் ஆதரவு கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களான, லீ ஸ்கொட் மற்றும், நிக் டி பொய்ஸ் ஆகிய இருவரும், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.

இவர்கள் தோல்வியடைந்தமை, பிரித்தானியாவில், விடுதலைப் புலிகளின் பரப்புரைக்கு பாரிய பின்னடைவாகும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய  நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், சிறிலங்காவுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது என்று சிறிலங்காவுக்கான கொன்சர்வேட்டிவ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த அமால் அபேகுணவத்தன குறிப்பிட்டார்.

“சிறிலங்காவின் நண்பர்களான ஜேம்ஸ் வார்ட்டன், அன்ட்ரூ ரொசின்டெல், மத்யூ ஒபோட், பொப் பிளாக்மன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றுள்ள லியம் பொக்ஸ்சும் கூட சிறிலங்காவின் பலமான நண்பன். இதைவிட எமது சொந்த உறுப்பினராக ரணில் ஜெயவர்த்தனவும் வெற்றி பெற்றுள்ளார்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கை வம்சாவளியினர் ஐந்து பேர் போட்டியிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் உமா குமரன், சொக்கலிங்கம் யோகலிங்கம், ரணில் ஜெயவர்த்தன, சாம்லி பெர்னான்டோ ஆகியோர் பற்றிய தகவல்களே ஏற்கனவே வெளியாகியிருந்தன.

எனினும், இலங்கை வம்சாவளியினரான, ரதி அழகரத்தினம் என்ற பெண் வேட்பாளரும் இந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார்.

பிரித்தானிய சுதந்திரக் கட்சியின் சார்பில், டல்விச் மற்றும் வெஸ்ட் நோவூட் தொகுதியில் போட்டியிட்ட, ரதி அழகரத்தினம் 1606 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

இங்கு, தொழிற்கட்சி வேட்பாளர், 27,772 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *