மேலும்

ஜோர்டானில் சிறிலங்கா தூதரகத்திற்கு வெளியே பயங்கரவாத தாக்குதல் – பாதுகாவலர் பலி

அம்மான் நகரில் உள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில், ஜோர்டான்  பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் செயல் என ஜோர்டானிய அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் 12.20 மணியளவில், கூர்மையான ஆயுதத்துடன் வந்த நபர் ஒருவர், தூதரகக் கட்டடத்திற்கு அருகில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக சிறிலங்கா தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட அதிகாரி, கோப்ரல் ஜவாத் அலி காலப் அல்-சலைதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. அவர் தனது கடமையில் இருந்த போதே, உயிரிழந்தார்.

ஜோர்டானின் பொதுப் பாதுகாப்பு பணியகத்தின் தகவல்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

இந்த மோதலின் போது, ​​சம்பவ இடத்திற்கு வந்த காவல் குழுவின் கட்டளை அதிகாரி ஒருவரின் முகத்தில் காயம் ஏற்பட்டது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.

தாக்குதல் நடத்திய நபர், பாதுகாப்புப் பணியாளர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜோர்டான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அதிகாரப்பூர்வமாக ஒரு பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட அதிகாரியின் ஆயுதத்தைப் பறிக்க தாக்குதல் நடத்திய நபர் முயன்றதாகவும், அதற்குள் மற்றொரு அதிகாரி தலையிட்டதாகவும் ஜோர்டான் அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தூதரக ஊழியர்கள் அனைவரும் மற்றும் ஜோர்டானில் வசிக்கும் சிறிலங்கா மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அம்மான் நகரில் உள்ள சிறிலங்கா தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கும் சக பணியாளர்களுக்கும் சிறிலங்கா தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

ஜோர்டானுக்கான சிறிலங்கா தூதுவர் விஸ்வநாத் அப்பொன்சு மற்றும் தூதரக அதிகாரிகள், ஜோர்டான் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்புச் சூழலைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *