மேலும்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உடன்பாடு இறுதிக்கட்டத்தில்

காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, இந்திய- சிறிலங்கா அமைச்சரவைகளின் அங்கீகாரம் பெறப்படுவது மட்டுமே எஞ்சியுள்ளதாக  சிறிலங்காவின் துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 65 மில்லியன் டொலர் நிதியுதவியை  கொடையாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக,

“காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திப் பணியில் எந்தத் தடங்கலும் இல்லை. உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; கையெழுத்திடும் நிகழ்வும் இறுதி நிலையை அடைந்துள்ளது.

இந்தியத் தூதரகமும் எந்தவிதத் தடைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் இந்தியா வழங்கும் முழுமையான மானியத்தின் மூலம் முன்னெடுக்கப்படும், முன்னதாக வழங்கப்பட்ட கடன் வசதி இப்போது மானியமாக மாற்றப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பல்வேறு தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதன் பின்னணியில், புரிந்துணர்வு உடன்பாட்டின் நிபந்தனைகள் குறித்து இரு அரசாங்கங்களுக்கு இடையே உடன்பாட்டை எட்டுவதில் ஏற்பட்ட காலதாமதமே இந்தத் தாமதத்திற்குக் காரணம்.

சிறிலங்கா தரப்பில் பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, சட்ட வரைவுத் திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினர் இதில் பங்கேற்றனர்.

பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன, இருப்பினும் தற்போது இது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த முன்மொழியப்பட்ட ஏற்பாட்டின்படி, இரு தரப்பினருக்கும் இடையிலான பங்களிப்பு 50-50 என்ற விகிதத்தில் இருக்கும். செயல்பாட்டுக் காலம் 25 ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், உடன்பாடு முழுமையாக இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக நிபந்தனைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிதியுதவியை  சிறிலங்கா திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

முந்தைய கடன் வசதித் திட்டத்தின் கீழ் ஆரம்பகட்ட ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப வடிவமைப்புகளுக்காக இந்தியா பணம் செலுத்தியுள்ளது. அதற்காக  சுமார் 2 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *