நீண்ட வாதங்களுக்குப் பின்னர் சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர கரியவசம், கடுவெல நீதிவான் அருண புத்ததாசவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறித்து சாகர காரியவசம் ஓகஸ்ட் 3 ஆம் நாள் கூறியதாகக் கூறப்படும் கருத்துக்களைத் தொடர்ந்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணையைத் தொடங்கியிருந்தது.
விசாரணையில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று காலை பணியகத்திற்குச் சென்ற சாகர காரியவசம் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் கடுவெல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவரை பிணையில் விடுவித்த நீதிவான், நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் பயணத் தடையையும் விதித்தார்.
சுமார் 3 மணிநேரம் நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின்னரே, நீதிவான் 17 பக்கங்கள் கொண்ட பிணை உத்தரவைப் பிறப்பித்தார்.
பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர், சாகர காரியவசம் நீதிமன்றத்தை விட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
விசாரணையின் போது, ஏராளமான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்டனர்.
