புதிய அரசியலமைப்பு விடயத்தில் கவனமாக செயற்பட இந்தியத் தூதுவர் அறிவுறுத்து
புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்ப்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று மாலை சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் பிற்பகல் 4.30 தொடக்கம் 6.00 மணி வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியனும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதனும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் மற்றும் நிஸாம் காரியப்பரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமீர் அலி, மற்றும் மொஹமட் தாஹிர் ஆகியோரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமானும், தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டனர்.
திங்கட்கிழமை சிறிலங்கா அதிபர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் நடத்திய சந்திப்புக்கள் மற்றும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக, அவர்கள் இந்தியத் தூதுவரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
சிறிலங்கா அதிபருடனான சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்ட, புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பித்தல், மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துதல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், மலையக மக்களுக்கான காணிப்பகிர்வு மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட விடயங்கள் பற்றியும், அவற்றுக்கு சிறிலங்கா அதிபர் அளித்த பதில்கள் குறித்தும் தமிழ்ப் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட இந்தியத் தூதுவர், மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்தியா ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சிறிலங்காவிற்கு அழுத்தம் வழங்கியிருப்பதாகவும், சிறிலங்கா வரவுள்ள இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி சிறிலங்கா அரசாங்க உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அதனை மீண்டும் வலியுறுத்துவார் எனவும் உறுதியளித்தார்.
அதேவேளை, புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில், ‘தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை கைவிட்டு, மீண்டும் பூச்சியத்திலிருந்து முழுமையாக ஆரம்பிக்கப் போகிறீர்களா?’ என தமிழ்ப்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இந்தியத் தூதுவர் வினவியுள்ளார்.
தற்போது மாகாணசபைகள் முறைமை உள்ளிட்ட சில கூறுகள் மூலம் அதிகாரப்பகிர்வுக்கான கட்டமைப்பொன்று அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை முற்றாக அழித்து விட்டு, மீண்டும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிப்பது ஆபத்தான விடயம் எனவும், புதிய அரசியலமைப்பு எனும்போது தற்போது இருப்பதை விடவும் கூடுதலான அதிகாரப்பகிர்வு பற்றியே தாம் பேசுவதாகவும் தமிழ்ப் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
அதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்த விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், ஒரு இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தைக் கடந்ததன் பின்னர், அதனைப் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தச் சந்திப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா,
ஆறு தமிழ்ப் பேசும் கட்சிகளின் கூட்டமைப்பை, அவர்களின் வேண்டுகோளின் பேரில் இன்று சந்தித்தேன்.
அவர்கள் தங்களுக்கு அக்கறையுள்ள விடயங்கள் குறித்தும், சிறிலங்கா அரச தலைமையுடனான சந்திப்புகள் உள்ளிட்ட தங்களின் பல்வேறு ஈடுபாடுகள் குறித்தும் எனக்கு விளக்கினர்.
மேலும், பல்வேறு இந்தியா – சிறிலங்கா திட்டங்கள் மற்றும் எமது இருதரப்பு ஒத்துழைப்பின் பிற அம்சங்கள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்.“ என்றும் தெரிவித்துள்ளார்.


