தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பிரித்தானிய துணைப் பிரதமர் சந்திப்பு
சிறிலங்காவுக்கு குறுகிய நேரப் பயணத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவரின் இல்லத்தில், நேற்று பிற்பகல் 2:30 மணி முதல் சுமார் 45 நிமிட நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டாம் என தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு, பிரித்தானிய தூதரகம் அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரித்தானிய தூதரகம் இந்தச் சந்திப்பு தொடர்பான அதிகாரபூர்வ அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை.
எனினும், இந்தச் சந்திப்பின் போது மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவது, உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை குறைமதிப்பிற்குட்படுத்தும் வகையிலான பிரஜாசக்தி திட்டம், அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
