“நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நிற்போம்“- அனுரவுக்கு மோடி கடிதம்
பேரிடரைத் தொடர்ந்து சிறிலங்காவின் நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை ஆதரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கடித்தை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கையளித்தார்.
அந்த கடிதத்தின் முழு விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதத்திலிருந்து உங்கள் நாடு மீண்டு வரும் நேரத்தில், நிவாரணம் மற்றும் மறுவாழ்வில், சிறிலங்காவுடன் இந்தியா எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பதைப் பற்றி கலந்துரையாடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை எனது சிறப்புத் தூதுவராக அனுப்புகிறேன்.
‘அயல் நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற எங்கள் கொள்கை மற்றும் முதலில் பதிலளிப்பவர் உறுதிப்பாட்டின் படி, உடனடி சவால்களை சமாளிக்க ஒப்பரேசன் சாகர் பந்து’வை நாங்கள் மேற்கொண்டோம்.
இந்திய கப்பல்கள், விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் நிவாரணப் பொருட்கள் மற்றும் அவசரகாலப் பொருட்களைக் கொண்டு வந்தன.
மருத்துவ அவசரநிலைகளைக் கையாளவும், முக்கியமான இணைப்பு மற்றும் தகவல்தொடர்புகளை மீட்டெடுக்கவும் சிறப்பு இந்திய குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், அவர்கள் உங்கள் தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர்.
ஒப்பரேசன் சாகர் பந்து சிறிலங்காவில் பல உயிர்களைக் காப்பாற்றியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் ஆழமான பிணைப்பின் வெளிப்பாடாக இது பரவலாகக் கருதப்பட்டது.
சிறிலங்கா இப்போது அடுத்த கட்டத்திற்கு தனது கவனத்தைத் திருப்பியுள்ள நிலையில், இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளியாகவும், நம்பகமான நண்பராகவும் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.
கடந்த காலத்தைப் போலவே, சிறிலங்காவில் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், மீள்தன்மையை உறுதி செய்வதிலும் நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நிற்போம்.
இந்தச் சூழலில், இந்தியா ஒரு விரிவான உதவித் தொகுப்பை வழங்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தத் தொகுப்பை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை உங்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு அமைச்சர் ஜெய்சங்கரைக் கேட்டுள்ளேன்.
சிறிலங்கா மீண்டும் முன்பை விட வலுவாக உயரும் என்று நான் நம்புகிறேன்.
இந்தப் பயணத்தில், அதன் தேசிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில், சிறிலங்கா எப்போதும் இந்தியாவை அதன் பக்கத்திலேயே காணும்.
எனது உயர்ந்த பரிசீலனையின் உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
