தையிட்டியில் பதற்றம் – போராட்டம் நடத்திய வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் பேர் கைது.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்திய வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று காலை 9 மணிக்கு வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்களால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் வலி.வடக்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, திஸஸ்ஸ விகாரை கட்டுமானம் சட்டவிரோத கட்டடம் எனக் குறிக்கும் அறிவித்தல் பலகையையும் நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் போராட்டம் தொடங்கிய நிலையில், பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர்.
இதனால் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கிய சிறிலங்கா காவல்துறையினர், சிவகுரு ஆதீன குருமுதல்வர் வேலன் சுவாமிகள், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ், மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் என 5 பேரை கைது செய்து பலவந்தமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் வரை தாம் அங்கிருந்து விலக மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பதற்ற நிலை காணப்படுகிறது.







