வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சி முடிவு
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக எடுக்க வேண்டிய இறுதி நிலைப்பாடு குறித்து, கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, இன்று அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஒரு சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது இந்தியப் பயணம் குறித்து கட்சியின் நிர்வாகக் குழுவிற்குத் தகவல் அளித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கலந்து கொள்ளாமல் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
