மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டது அரசாங்கம்
மக்களுக்கு உறுதியான நிவாரணம் வழங்காத வரவுசெலவுத் திட்டம் மூலம் அரசாங்கம் பொதுமக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று சிறிலங்கா அதிபரால், தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய அவர்,
இது சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரி ஒருவரால் எழுதப்பட்டுள்ளது.
அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. வாழ்க்கைச் செலவுடன் போராடும் மக்களை கைவிட்டுவிட்டது.
இது இரண்டு நாக்குகளைக் கொண்ட அரசாங்கம். அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒன்றைச் சொன்னார்கள், பின்னர் வேறு ஒன்றைச் செய்தார்கள்.
இந்த அரசாங்கத்தால் மக்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் தனது புதிய “நவ-தாராளவாத சுதந்திர சந்தை சித்தாந்தத்திற்கும்” அவரது கட்சியின் “பாதுகாப்புவாத தொழில்துறை கொள்கைக்கும்” இடையில் “குழப்பமடைந்துள்ளதாக தோன்றுகிறது என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர், ஒரு கோவிலில் பிரசங்கம் செய்பவர் போல, திருச்சபை பாதிரியார் போல இருந்தார்.
பொருளாதாரம் எவ்வாறு வளரும் என்பதை அவர் விளக்கவில்லை.
2027 முதல் சொத்து வரி அல்லது இந்த ஆண்டு முடிவடையும் மூத்த குடிமக்களுக்கு 5% கூடுதல் வட்டி நன்மை போன்ற முக்கிய பிரச்சினைகளைக் குறிப்பிடத் தவறிவிட்டார்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் வரவுசெலவுத் திட்டம் வெறும் பேச்சு, எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், அதிபர் பேசியதில் 80% நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
