மேலும்

இழப்பீட்டு பணியகத்திற்கு படை அதிகாரிகள் – தமிழ் அரசுக் கட்சி கடும் எதிர்ப்பு

இழப்பீடுகளுக்கான பணியகத்தின் உறுப்பினர்களாக முன்னாள் சிறிலங்கா படை அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு, அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இழப்பீடுகளுக்கான பணியகத்தில் வெற்றிடமாக உள்ள நான்கு பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பாக, இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“வடக்கு மற்றும் கிழக்கில் உள்நாட்டுப் போருக்குப் பின்னர்,  நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக, இந்த பணியகம் பொதுவாக கூறப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்புப் படையினரால் பெரும்பாலும் செய்யப்பட்ட மீறல்களுக்கு ஈடுசெய்ய, இழப்பீடுகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பொறுப்புக்கூறல் அல்லது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு உள்ளக பொறிமுறையையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர்.

ஏனெனில் இந்த நிறுவனங்களின் பாரபட்சமற்ற தன்மையில் அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.

இந்தச் சூழலில்தான், இழப்பீடுகளுக்கான பணியகம் தொடர்பான மிகவும் கடுமையான பிரச்சினையைச் சுட்டிக்காட்டவே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் பாதுகாப்புத் துறை பின்னணியைக் கொண்ட எந்தவொரு நபரும், இவ்வளவு நாட்களாக எமது மக்கள் எதனைக் கூறி வருகிறார்கள் என்பதையும்,  சிறிலங்கா அரசாங்கத்தின் அலட்சியத்தையுமே உறுதிப்படுத்தும்.

இழப்பீடுகளுக்கான பணியகத்திற்கு நியமிக்கப்படுவதற்கு 4 பெயர்கள் அண்மையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்பதையும், அவர்களில் இருவர் பாதுகாப்புத் துறை பின்னணியைக் கொண்டவர்கள் என்பதையும் நாங்கள் நம்பத்தகுந்த முறையில் அறிந்து கொள்கிறோம்.

இதன் உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல்  திருமதி வசந்த பெரேரா (முன்னர் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் பதவியை வகித்தவர்) மற்றும் ஜோசப் டெரன்ஸ் ஞானானந்தன் சுந்தரம் (முன்னாள் கடற்படை அதிகாரி)  ஆகியோர் நியமிக்கப்பட்டால், பணியகத்தின் ஐந்து உறுப்பினர்களில் மூன்று பேர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

பாதுகாப்புத் துறையிலிருந்து ஒருவர் கூட இது போன்ற ஒரு பதவிக்கு வரக்கூடாது.

2025 நவம்பர் 5,  அன்று வவுனியாவில் கூடிய இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு, மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா மற்றும் ஜோசப் டெரன்ஸ் ஞானானந்தன் சுந்தரம் ஆகியோரை இழப்பீட்டு பணியகத்திற்கு நியமிக்க வேண்டாம் என்று, சிறிலங்கா அதிபருக்கு எழுத்து மூலம் வலியுறுத்துவது என்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *