காணிகளை விடுவிக்கக் கோரி வலி.வடக்கு மக்கள் போராட்டம்
சிறிலங்கா படையினரால் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு பகுதியில் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பலாலி சந்தியில் நேற்றுக்காலை 8.30 மணி தொடக்கம், 12.30 மணி வரை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் போராட்டம் நடத்திய மக்கள், கூடாரம் அமைக்க முயன்ற போது சிறிலங்கா காவல்துறையினர் அதற்கும் அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறு தோறும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தவுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.





