மேலும்

மே 18இல் வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு

deepamஇறுதிக்கட்டப் போரில் மரணமான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்காலில் நாளை மறுநாள்- மே 18ம் நாள், நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நினைவேந்தல் நிகழ்வில், பங்கேற்குமாறு, வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோரால், நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை 10 மணிக்கு முள்ளிவாய்க்கால் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் நடைபெறவுள்ள இந்த நினைவேந்தல் நிகழ்வு ஆத்மசாந்தி பிரார்த்தனையுடன் ஆரம்பமாகும்.

மும்மதங்களின் தலைவர்கள் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்வார்கள். இதையடுத்து, மௌனப் பிரார்த்தனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறும், படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக, அன்றைய நாளில்,  பிரார்த்தனை செய்யுமாறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

mullivaikkal-memo-jaffna-2015

அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவிடத்துக்கு முன்பாக, நேற்றுக்காலை தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், சிவாஜிலிங்கம், கஜதீபன், சுகிர்தன், அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *