கொழும்பில் மேகவெடிப்பு – 49 நிமிடங்களுக்குள் 120 மில்லி மீட்டர் மழை
கொழும்பில் நேற்றுமாலை மேகவெடிப்பு ஏற்பட்டு கொட்டிய மழையினால் தேசிய மருத்துவமனை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில மணி நேரங்களுக்குள் 129 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மேகவெடிப்பு ஏற்பட்டு 49 நிமிடங்களுக்குள் 120 மில்லி மீட்டர் மழை கொட்டியதாக, யாழ். பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்த பலத்த மழையினால் கொழும்பின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன; பல வீதிகளில் வெள்ளம் தேங்கியதுடன், கொழும்பு முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கனமழையைத் தொடர்ந்து பல வீதிகள் நீரில் மூழ்கியதால், நெரிசல் மிகுந்த மாலை வேளையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் தாமதத்தைச் சந்தித்தனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனைக்குள்ளேயும் வெள்ளம் புகுந்த நிலையில், மருத்துவமனைச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
எனினும், தற்போது மருத்துவமனை சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
