மேலும்

சிறிலங்காவின் 15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு முடிவுகள்

2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட, சிறிலங்காவின் 15-வது மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரபூர்வ முடிவுகளை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, சிறிலங்காவின் மொத்த மக்கள் தொகை 21,781,800 ஆகப் பதிவாகியுள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 350 பேராக உள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான மேல் மாகாணத்தில் மொத்த மக்கள் தொகையில் 28.1வீதமானோர் வசிக்கின்றனர்.

மாவட்ட மட்டத்தில், கம்பஹா மாவட்டத்தில் 2,436,142 அதிகூடிய மக்கள் தொகை பதிவாகியுள்ளது.  குறைந்த மக்கள் தொகை முல்லைத்தீவு மாவட்டத்தில் 122,619 ஆகப் பதிவாகியுள்ளது.

2024-ஆம் ஆண்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், மொத்த மக்கள் தொகையில் 18.0% மாக உள்ளனர். அதேவேளை, சிறுவர் மக்கள் தொகை சதவீதம் 20.7% வரை குறைந்துள்ளது.

தேசிய மட்டத்தில்  பாலின விகிதத்தின்படி, 100 பெண்களுக்கு 93.1 ஆண்கள் உள்ளனர். இது 2012-ஆம் ஆண்டில் காணப்பட்ட 93.8 என்ற நிலையை விடக் குறைவாகும்.

மொத்த மக்கள் தொகையில் 41.8% பேர் ஒருபோதும் திருமணம் செய்யாதவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது 2012-ஆம் ஆண்டில் 30% ஆகக் காணப்பட்ட நிலையில், 11.8 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

ஆண்களின் சராசரி திருமண வயது 29.2 ஆண்டுகள் வரையும், பெண்களின் திருமண வயது 25.6 ஆண்டுகள் வரையும் உயர்ந்துள்ளது.  2012 அறிக்கையில் ஆண்களின் திருமண வயது 27.2 ஆகவும்,  பெண்களின் திருமண வயது, 23.4 ஆகவும் காணப்பட்டது.

வாழ்க்கைத் துணையை இழந்தவர்களின் எண்ணிக்கை, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களிடையே பெண்கள் 44.2% ஆகவும், ஆண்கள் 10.5% ஆகவும் உயர்ந்துள்ளது. 2012-ஆம் ஆண்டில் இது பெண்கள் 38.4% ஆகவும் ஆண்கள் 8.6% ஆகவும் பதிவாகியிருந்தது.

இனம் மற்றும் மதம் தொடர்பான தரவுகள்

சிறிலங்காவின் மக்கள் தொகையில், மிகப்பெரிய இனக்குழுவாக சிங்களவர்கள் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 16,144,037 ஆகும். இது  மொத்த மக்கள் தொகையில் 74.12% மாகும்.

இதுதவிர, இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 2,681,627 (12.31%) ஆகவும், இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கை 2,283,246 (10.47%) உள்ளது.

மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 600,360 ஆகப் பதிவாகியுள்ளதுடன், இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 2.76% சதவீதமாகும்.

ஏனைய இனக்குழுக்களில் பறங்கியர் 31,721, மலாயர் 26,650, இலங்கை செட்டி 2,443, பரதவர் 1,183 மற்றும் வேடர் 1,373 பேர் உள்ளனர். ‘ஏனையவை’ என வகைப்படுத்தப்பட்டவர்கள் 9,160 பேர் உள்ளனர்.

மாகாண மட்டத்தில், தென் மாகாணம் (94.8%), வடமத்திய மாகாணம் (90.5%), சப்ரகமுவ (86.5%), வடமேல் மாகாணம் (84.8%) மற்றும் மேல் மாகாணம் (83.6%) ஆகியவற்றில், சிங்களவர்கள் அதிக சதவீதத்தில் உள்ளனர்.

வட மாகாணத்தில் , பெரும்பான்மையாக 91.5% இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இலங்கை முஸ்லிம்கள் அதிகபட்சமாக 39.5% ஆக உள்ளதுடன், இந்திய வம்சாவளித் தமிழர்கள், பிரதானமாக மத்திய மாகாணத்தில் 15% செறிந்து வாழுகின்றனர்.

மத ரீதியாக, மொத்த மக்கள் தொகையில் 69.8% பௌத்தர்களாகவும், 12.6% இந்துக்களாகவும், 10.7% இஸ்லாமியர்களாகவும் உள்ளனர்.

அத்துடன் 5.6% ரோமன் கத்தோலிக்கர்களும், 1.3% ஏனைய கிறிஸ்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

கல்வி மற்றும் எழுத்தறிவு

2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் கல்வி மட்டம் மற்றும் எழுத்தறிவு 2024-ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

குறிப்பாக, உயர் கல்விக்கான பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதுடன், இளைஞர்களிடையே டிஜிட்டல் அறிவு வேகமான வளர்ச்சியளடைந்துள்ளது.

25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் பெரும்பாலானோர் (58.4%) இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்றுள்ளனர். இது இரு பாலினத்தவருக்கும் பொதுவான ஒரு பண்பாகக் காணப்படுகிறது.

மூன்றாம் நிலைக் கல்வி மட்டத்தில் ஆண்களை விடப் பெண்களின் சதவீதம் அதிகமாக உள்ளது.

2012-ஆம் ஆண்டு கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், பாடசாலைக்குச் செல்லாத அல்லது ஆரம்பக் கல்வியை மாத்திரம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2024-ல் கணிசமாகக் குறைந்துள்ளது.

25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 6,690,333 பேர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் அல்லது அதற்கும் மேற்பட்ட தகுதிகளைப் பெற்றுள்ளனர்.

மூன்றாம் நிலைக் கல்வியைத் தமது உயர்ந்தபட்ச கல்வித் தகுதியாகக் குறிப்பிட்டவர்களின் எண்ணிக்கை 2012-உடன் ஒப்பிடுகையில் 18.2% இலிருந்து 26.2% வரை அதிகரித்துள்ளது. இங்கு ஆண்களை விடப் பெண்களின் முன்னேற்றம் மிகத் தெளிவாக உள்ளது.

ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் கணினி அறிவு 34.7% ஆகவும், டிஜிட்டல் அறிவு 67.6% என்ற உயர் மட்டத்திலும் காணப்படுகிறது.

20-24 வயதுப் பிரிவினர் அதிகூடிய கணினி அறிவைப் பதிவு செய்துள்ள அதேவேளை, 15-19 வயதுப் பிரிவினர் டிஜிட்டல் அறிவில் முன்னிலையில் உள்ளனர்.

அத்துடன், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களில் கூட 15% இற்கும் அதிகமானோர் டிஜிட்டல் அறிவைக் கொண்டுள்ளனர்.

வீடமைப்பு மற்றும் வாழ்க்கைத்தரம்

2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024-ஆம் ஆண்டில் சிறிலங்காவில் வீடுகளின் தரம், சுகாதார வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அணுகல் ஆகியவை கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது.

மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ளதுடன், மண்ணெண்ணெய் மற்றும் விறகு பயன்பாடு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

வீட்டு அலகுகள்: 2024-ஆம் ஆண்டில் சிறிலங்காவில் வசிப்பிடங்களைக் கொண்ட வீட்டு அலகுகளின் எண்ணிக்கை 6,030,541 ஆகப் பதிவாகியுள்ளது. இது 2012-உடன் ஒப்பிடுகையில் 822,801 அலகுகள் அதிகரித்துள்ளன.

பிரிவு மற்றும் மாவட்ட ரீதியாக:

மொத்த வீட்டு அலகுகளில் அதிகூடிய சதவீதம் கிராமப்புறங்களில் பதிவாகியுள்ளது, நகர்ப்புற மற்றும் தோட்டத்துறைகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மாவட்ட ரீதியாக அதிகூடிய வீட்டு அலகுகள் கம்பஹா மாவட்டத்திலும், குறைந்த அளவு மன்னார் மாவட்டத்திலும் பதிவாகியுள்ளன.

வீட்டு வகை மற்றும் உரிமை:

சிறிலங்காவில் பெரும்பாலானவை தனி வீடுகளாகும் , அவற்றில் 82.2% ஒற்றை மாடி வீடுகளாகும். மேலும், 84.69% வீடுகளின் உரிமை அந்த வீடுகளில் வசிக்கும் உறுப்பினர்களிடமே இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.

தனித்து வாழ்பவர்கள்:

மொத்த வீட்டு அலகுகளில் 10.5% தனி நபர் வீடுகளாகப் பதிவாகியுள்ளன. இதன்படி, 640,704 பேர் தனித்து வசிப்பதுடன், அவர்களில் 370,229 பேர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியோர்களாவர். இவர்களில் பெரும்பான்மையானோர் (71.3%) பெண்களாவர்.

வீட்டு அலகுகளில் 92.2% ஆனவை தமது வீட்டிற்குள் அல்லது வளவிற்குள் குடிநீர் வசதியைக் கொண்டுள்ளன.

தேசிய மின்சாரக் கட்டமைப்பின் மூலம் மின்சாரம் பெறும் வீடுகளின் சதவீதம் 2012 இல் காணப்பட்ட 87.0% இலிருந்து 98.0% ஆக உயர்ந்துள்ளதுடன், மண்ணெண்ணெய் பயன்பாடு 1.6% ஆகக் குறைந்துள்ளது.

சமையலுக்காக 55.4% வீடுகள் விறகையும், 42.4% வீடுகள் எரிவாயுவையும் பயன்படுத்துகின்றன.

62% வீடுகள் வீட்டிற்குள்ளேயே சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளதுடன், 99.6% வீடுகள் நீர் முத்திரை கொண்ட கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றன.

மேலும், 93.8% குடும்பங்கள் தமது பயன்பாட்டிற்காக அலைபேசிகளைக் கொண்டுள்ளன.

சுகாதாரம் 

சிறிலங்காவின் சுகாதாரத் துறையில் ஒரு பிரதான சவாலாக தொற்றா நோய்களின் அதிகரிப்பு  காணப்படுகிறது.

3,223,413 நபர்கள் பல்வேறு மட்டத்திலான செயல்பாட்டு சிரமங்களால் (Functional difficulties) பாதிக்கப்பட்டுள்ளனர் . இது மக்கள் தொகையில் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 35 பேர் என்ற விகிதமாகும்.

2024 தரவுகளின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 19.2% (4.187 மில்லியன் நபர்கள்) தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவிலான நோயாளிகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய்த்தாக்கங்கள் பிரதானமாக பெண்கள் மற்றும் முதியோர்களிடையே பதிவாகியுள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம் ஒரு நாட்பட்ட நோயினாலாவது பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி மட்டம் அதிகரிக்கும் போது தொற்றா நோய்கள் பதிவாவது படிப்படியாகக் குறைவதாகத் தரவுகள் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இடப்பெயர்வு

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 13% பேர் தமது பிறந்த இடத்திற்கு வெளியே வேறு பகுதிகளில் குடியேறிய வாழ்நாள் இடம்பெயர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகூடிய தேறிய குடியேற்றங்களைக் கொண்ட மாவட்டங்களாக கம்பஹா (357,528) மற்றும் கொழும்பு (191,524) பதிவாகியுள்ளது.  தற்போது இடம்பெயர்பவர்களின் பிரதான இலக்காக கம்பஹா மாவட்டம் மாறியுள்ளது.

கண்டி, மாத்தறை, நுவரெலியா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் வாழ்நாள் ரீதியாக வெளியே இடம்பெயர்ந்துள்ளனர்.குருணாகல் மாவட்டத்திற்குள் இடம்பெயர்வதும் அங்கிருந்து வெளியேறுவதும் சம அளவில் காணப்படுகிறது.

வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய வட மாகாண மாவட்டங்கள் நேர்மறையான வாழ்நாள் இடம்பெயர்வு முறையைக் காட்டுகின்றன.

முன்னைய வதிவிட மாவட்டத்தின் அடிப்படையில் இடம்பெயர்வுகளைக் கருத்தில் கொள்ளும்போது, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய இரு மாவட்டங்களிலும் 0.5 மில்லியனுக்கும் அதிகமான இடம்பெயர்ந்தோர் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து வெளியே இடம்பெயர்வோரின் விகிதமும் உயர் மட்டத்தில் காணப்படுவதுடன், மிகக் குறைந்த அளவில் வெளியே இடம்பெயர்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவிலான உள்வரும் இடம்பெயர்வுகள் பதிவாகியுள்ளது.

தற்காலிகமாக வெளிநாடு சென்றுள்ள வீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 672,249 ஆகும். இவர்களில் பெரும்பான்மையானோர், அதாவது 61.3% பேர் ஆண்களாவர்.

தொழிற்சக்தி மற்றும் வேலைவாய்ப்பு

சிறிலங்காவின் ஒட்டுமொத்த தொழிற்சக்தி பங்களிப்பு வீதம் 47.3% ஆகும். இதில் ஆண்களின் பங்களிப்பு 67.4% என்ற உயர் மட்டத்தில் உள்ளது. எனினும், பெண்களின் பங்களிப்பு 28.9% என்ற குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது.

பொருளாதார ரீதியாகச் சுறுசுறுப்பான மக்கள் தொகையில் 68% பேர் ஆண்களாவர். பொருளாதார ரீதியாகச் சுறுசுறுப்பற்ற மக்கள் தொகையில் 70.6% பேர் பெண்களாவர்.

அதேபோல், வேலைவாய்ப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 7.68 மில்லியன் ஆகும், அவர்களில் 69.3% பேர் ஆண்களாவர்.

ஒட்டுமொத்த வேலையின்மை வீதம் 6% ஆகப் பதிவாகியுள்ளதுடன், 20-24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் பிரிவினரிடையே அதிகூடிய வேலையின்மை காணப்படுகிறது.

வேலை செய்யும் வயதிலுள்ள மக்கள் தொகையில் 52% பேர் பொருளாதார ரீதியாகச் சுறுசுறுப்பற்றவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்குப் பிரதான காரணங்களாக வீட்டுப் பொறுப்புகள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் முதுமை அடைதல் போன்றவை அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *