இழப்பீட்டு பணியகத்திற்கு படை அதிகாரிகள்- பாதிக்கப்பட்டவர்களின் பயத்தை உறுதிப்படுத்தும்
இழப்பீடுகளுக்கான பணியகத்தில் முன்னாள் சிறிலங்கா இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கப்படுவது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வெளிப்படுத்திய ஒவ்வொரு பயத்தையும் உறுதிப்படுத்தும் என்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இழப்பீடுகளுக்கான பணியகத்தில் முன்னாள் சிறிலங்கா இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கப்படுவது எதிர்த்து இலங்கை தமிழ் அரசு கட்சி சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
பல ஆண்டுகளாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறலில் நம்பிக்கை இல்லை என்று கூறி வருகின்றனர். இதில் அவர்கள் தெளிவாக உள்ளனர்.
அவர்களின் துன்பங்களுடன் தொடர்புடைய அதே நபர்களால் வழிநடத்தப்படும் நிறுவனங்களை நம்ப முடியாது.
அரசாங்கம் ஒரு உள்நாட்டு செயல்முறையை உறுதியளிக்கிறது. ஆனால் இந்த நபர்கள் நியமிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வெளிப்படுத்திய ஒவ்வொரு பயத்தையும் அது உறுதிப்படுத்தும்.
இவ்வாறான கவலைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கு ஒரு சந்திப்பைக் கோரி 4 மாதங்களுக்கு முன்னரே சிறிலங்கா அதிபருக்கு கடிதம் எழுதினோம். எந்த பதிலும் இல்லை என்றும் சாணக்கியன் பதிவிட்டுள்ளார்.
