சிறிலங்காவை நோக்கி வரிசை கட்டும் ரஷ்ய போர்க்கப்பல்கள்
ஒரே வாரத்தில் ரஷ்ய கடற்படையின் மூன்றாவது போர்க்கப்பல், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
ரஷ்ய கடற்படையின் Admiral Vinogradov என்ற நாசகாரி போர்க்கப்பல், நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
ரஷ்யாவின் Udaloy வகையைச் சேர்ந்த, இந்த நாசகாரி போர்க்கப்பல், 168.8 மீற்றர் நீளமும், 7595 தொன் எடையும் கொண்டது. இதில் 350 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.
இந்தப் போர்க்கப்பலில் வந்துள்ள ரஷ்ய கடற்படையினர், கொழும்பில் தரித்திருக்கும் போது சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
மார்ச் 10ஆம் நாள் Admiral Vinogradov என்ற இந்த நாசகாரி போர்க்கப்பல், கொழும்பு துறைமுகத்தை விட்டு வெளியேறும்.
ரஷ்ய கடற்படைக் கப்பல்களான, Yaroslav Mudry மற்றும் Victor Konetsky ஆகியன, மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கடந்த 4ஆம் நாள் கொழும்பு வந்திருந்தன.
நேற்று முன்தினம் இந்தக் கப்பல்கள் புறப்பட்டுச் சென்ற நிலையில், ரஷ்யாவின் இன்னொரு போர்க்கப்பல் நேற்று கொழும்பு வந்துள்ளது.