மேலும்

கிழக்கில் இரண்டு ‘கொரோனா’ தடுப்பு நிலையங்கள்

கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைத்து கண்காணிப்பதற்காக மூன்று தடுப்பு நிலையங்களை சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ளது.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம், கண்டகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையம், ஹெந்தல தொழுநோய் மருத்துவமனை ஆகியனவே தடுப்பு நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் அதிகளவில் பாதித்த நாடுகளான இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில்  இருந்து வருபவர்கள், நாளை தொடக்கம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படுவர் என்று  சுகாதார சேஹவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

ஹெந்தல தொழுநோய் மருத்துவமனையின் மூன்று கட்டடங்களை தடுப்பு முகாமாகப் பயன்படுத்தும், முடிவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களை அடுத்து, மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கண்டகாடு புனர்வாழ்வு நிலையம் ஆகியவற்றை தடுப்பு நிலையங்களாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வருவோம், இந்த தடுப்பு நிலையங்களில் 14 நாட்கள் தங்க வைக்கப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே விடுவிக்கப்படுவார்கள்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு நிலையமாக பயன்படுத்துவதற்காக,   1897ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக சுவீகரிக்கப்படுவதாக, அதன் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாவினால் கட்டப்பட்டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

கண்டகாடு புனர்வாழ்வு நிலையம், விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் அது போதைப்பொருள் மறுவாழ்வு மையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *