மேலும்

வடக்கில் முண்டியடிக்கும் சுயேட்சைக் குழுக்கள்

வடக்கு மாகாணத்தில், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுக்கள் பல ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து, வரும் 12ஆம் நாளில் இருந்து 19 ஆம் நாள் வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, சுயேட்சைக் குழுக்கள் பல கட்டுப்பணத்தை செலுத்த ஆரம்பித்துள்ளன.

வடக்கில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும், இதுவரை 10 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார், மயில்வாகனம் விமலதாஸ், வில்லியம் விக்டர் அன்ரனி, ஆழ்வாப்பிள்ளை குருகுலன், அகமட் சுபியான் ஆகியோர் தலைமையிலான ஆறு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக எம்.பி.நடராசா மற்றும் இரண்டு சிங்களவர்களும், சுயேட்சைக் குழுக்களாகப் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

அண்மையில் உருவாக்கப்பட்ட புதிய கட்சிகள், கூட்டணிகளுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைக்காதமையினால், சுயேட்சைக் குழுக்களாக களமிறங்கவுள்ளன.

அதேவேளை, பிரதான தமிழ்க் கட்சிகளின் வாக்குகளை உடைப்பதற்காகவும், பல சுயேட்சைக் குழுக்கள் களமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *