மேலும்

உடைந்தது ஐதேக – தனித்தனியாக போட்டி

கடைசி நேர இணக்க முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி 22 மாவட்டங்களிலும் யானை சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.

அதேவேளை, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தொலைபேசி சின்னத்தில், ஐதேக இல்லாமல் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

இதனால் சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.

ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள், அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

இதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி 22 தேர்தல் மாவட்டங்களிலும், யானை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று அறிவித்தது.

ஐதேகவின் பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் கட்சியின் இந்த முடிவை அறிவித்தார்.

இதையடுத்து, உடனடியாக செய்தியாளர் சந்திப்பை கூட்டிய ஐக்கிய மக்கள் சக்தி பொதுச்செயலர் ரஞ்சித் மத்தும பண்டார, தாங்கள் ஐதேக இல்லாமல் தொலைபேசி சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இரண்டு கட்சிகளும் தனித்தனியாக வேட்புமனுக்களைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

ஐதேகவின் முக்கிய தலைவர்கள் இரண்டுபட்டுள்ள நிலையில், கட்சியில் பாரிய பிளவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் மிகப் பழைமை வாய்ந்த கட்சியான ஐதேகவில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு பாரிய விளைவுகளை எதிர்வரும் வாரங்களில் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *