மேலும்

18 ஆண்டு மோதலுக்கு முடிவு – தலிபான்களுடன் அமெரிக்கா உடன்பாடு

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும்  இடையில் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளுக்கும் மேலான நீடித்த மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், கட்டார் – டோஹாவில் நடைபெற்ற நிகழ்வில், இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் முன்னிலையில் அமெரிக்காவின் சிறப்பு தூதுவர் சல்மே கலீல்சாட்டும், தலிபான்களின் அரசியல் தலைவர் முல்லா  அப்துல் கானி பரதாரும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.,

இந்த உடன்பாட்டை ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் அமைப்பு முறைப்படி நடைமுறைப்படுத்தினால், 14 மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள தமது படையினர் அனைவரையும் திரும்பப் பெறுவதற்கு, அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

அல்-கெய்டா அல்லது வேறு எந்த தீவிரவாதக் குழுவையும் தமது  கட்டுப்பாட்டப் பகுதிகளில் செயற்பட அனுமதிப்பதில்லை என்று இந்த உடன்பாட்டில், தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

2001 செப்ரெம்பர் 11இல், நியூயோர்க்கில் அல்-கெய்டா நடத்திய தாக்குதல்களுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தான் மீது  அமெரிக்கா படையெடுத்தது.

18 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த மோதல்களில்,  2,400 க்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர்.

இன்னமும், ஆப்கானிஸ்தானில் சுமார் 12,000 அமெரிக்க படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ள நிலையில், தலிபான்கள், அல்- கெய்டாவுடனான தொடர்புகளை துண்டித்து, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *