சிறிலங்காவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் ஜப்பான்
சிறிலங்காவின் பாதுகாப்புத் திறன்கள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசிய அபிவிருத்தியை வலுப்படுத்துவதில் ஜப்பானின் நீண்டகால ஆதரவு இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த பங்காளித்துவத்தை பிரதிபலிப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதரகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற, ஜப்பான் தற்காப்புப் படைகளின் 72-வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது ஜப்பானின் அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் (OSA) திட்டத்தின் கீழ் உடன்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறினார்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்தியதுடன், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புத் துறைகளில் பரந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அதிகாரபூர்வ பாதுகாப்பு உதவித் திட்டத்தின் கீழ் சிறிலங்கா கடற்படைக்கு ஆளில்லா வான்வழி கண்காணிப்பு வாகனங்கள் (UAV) , சிறிலங்கா கடலோர காவல்படைக்கான கப்பல்கள் மற்றும் டொப்லர் வானிலை ராடர் அமைப்பு உள்ளிட்ட மேம்பட்ட வானிலை வசதிகளை வழங்குவதன் மூலம் சிறிலங்காவின் கடல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் ஜப்பான் தொடர்ச்சியான உதவிகளை வழங்கியுள்ளது.
களனி கங்கை வெள்ளத் தணிப்புத் திட்டத்திற்காக ஜப்பான் அனைத்துலக ஒத்துழைப்பு முகமை (JICA) மூலம் 2.179 பில்லியன் யென் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) மூலம் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தள்ளார்.
