வலி. வடக்கு காணிகளை பார்வையிட்ட விலை மதிப்பீட்டு அதிகாரிகள் – சுவீகரிக்க முயற்சி
யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கில் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விலை மதிப்பீட்டு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளது, காணி விடுவிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணி உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களை விலை மதிப்பீட்டு திணைக்கள அதிகாரிகள் கடந்த புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்ததாக, வலிகாமம் வடக்கில் தனியார் காணிகளை விடுவிப்பதற்காக போராடும் பொதுமக்கள் அமைப்பு ஒன்றின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா படையினரின் பயன்பாட்டிற்காக, தமது காணிகளை சுவீகரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் இருக்கலாம் என, காணி உரிமையாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களின் காணிகள் அவர்களுக்கே மீளப் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினரின் பிடியில் உள்ள தனியார் காணிகள், விடுவிக்கப்படவில்லை.
இந்தப் பகுதியில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளன.
இந்தப் பின்னணியில், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விலை மதிப்பீட்டு அதிகாரிகள் பார்வையிட்டுள்ளது, காணிகளை விடுவிப்பதற்குப் பதிலாக, அவற்றைக் சுவீகரிப்பதற்கான நடவடிக்கையாக இருக்கலாம் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.
“மக்களின் நிலங்கள் மக்களுக்குச் சொந்தமானது என்று திரும்பத் திரும்பச் சொல்லும் சிறிலங்கா அரசாங்கம், விடுவிக்கப்படாத தனியாருக்குச் சொந்தமான காணிகளுக்கு, அவற்றின் உரிமையாளர்களின் அனுமதியின்றி எப்படி விலை மதிப்பீட்டு அதிகாரிகளை அனுப்ப முடியும்?”
இழப்பீட்டுச் செயன்முறை மூலம் சிறிலங்கா படையினருக்கு மாற்றும் நோக்கில், சொத்துக்களின் பெறுமதியை மதிப்பிடுவதற்காக அதிகாரிகள் அனுப்பப்பட்டிருக்கலாம்.
எங்கள் நிலங்களை வேறு யாரிடமும் ஒப்படைக்க நாங்கள் போராடவில்லை. எங்கள் நிலங்கள் எங்களுக்குத் திரும்ப வேண்டும்.
எங்கள் சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு பதிலாக இழப்பீட்டை நாங்கள் ஏற்க மாட்டோம்,” என்றும் வலி.வடக்கு காணிகளை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.
