ராஜ்நாத் சிங்கின் பயணத்தின்போது 3 பாதுகாப்பு உடன்பாடுகளும் கைச்சாத்திடப்படும்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மூன்று நாள் பயணத்தின் போது, சிறிலங்காவும் இந்தியாவும் பாதுகாப்பு தொடர்பான மூன்று புதிய புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திடவுள்ளன.
இந்த புரிந்துணர்வு உடன்பாடுகள் தவிர, கடந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாள் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் இந்தியப் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்திய-சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டையும் இரு தரப்பினரும் ஆய்வு செய்வார்கள்.
புதிய புரிந்துணர்வு உடன்பாடுகளில் ஒன்று இந்திய வான் பாதுகாப்பு பீரங்கிகளை வழங்குவதை உள்ளடக்கியிருக்கும், மற்றவை இரு நாடுகளின் மாணவர் படைகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கும், மற்றொன்று சிறிலங்கா பாதுகாப்பு கல்லூரிக்கும் இந்திய பாதுகாப்பு கல்லூரிகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஆகும்.
வரும் செவ்வாயன்று கொழும்பு வரும் ராஜ்நாத் சிங், புதன்கிழமை, பாதுகாப்பு அமைச்சரான சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்திப்பார்.
அவர் நாடாளுமன்றத்திற்கு பயணம் மேற்கொள்ளும்போது பிரதமர் ஹரினி அமரசூரியாவையும் சந்திப்பார். மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் பார்வையிடுவார்.
அன்றைய தினம் பாதுகாப்பு அதிகாரிகள் பிரதானி பணியகத்தை ஒழிப்பதற்கான சட்டமூலம் மீது நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, கடந்த ஆண்டு டிட்வா புயலால் அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த உள்கட்டமைப்புகளைப் புதுப்பிக்க 450 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் உட்பட, இந்திய நிதியுதவி பெற்ற திட்டங்களின் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்வார்.
மேலும், புயலால் சேதமடைந்து இந்திய உதவியுடன் புனரமைக்கப்பட்ட மூன்று பாலங்களையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் காணொளி மூலம் திறந்து வைக்கவுள்ளார். இந்தப் பாலங்களில் இரண்டு குருநாகல மாவட்டத்திலும், ஒன்று மட்டக்களப்பிலும் அமைந்துள்ளன.
செவ்வாய்க்கிழமை மாலை, இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய சமூகத்தினரைச் சந்திப்பார்.
நாடாளுமன்றத்திலிருந்து இராணுவத் தலைமையகத்திற்குச் செல்வும் அவர், பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயாகொந்த மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
புதன்கிழமை மாலை கங்காராமய விகாரையில் நடைபெறும் போதி பூஜையிலும் அவர் பங்கேற்பார்.
புதன்கிழமை மாலை, இந்தியக் கடற்படைக் கப்பலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அழைப்பாளர்களுடன் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
வியாழக்கிழமை புதுடெல்லி திரும்புவதற்கு முன்னர், நுவரெலியாவில் உள்ள சீதைஅம்மன் கோவிலுக்கு ராஜ்நாத் சிங் செல்வதற்கும் திட்டமிட்டுள்ளார்.
