மேலும்

ஆய்வுக்கப்பல்கள் மீதான தடை- சீனத் தூதுவர் கவலைப்படாதது ஏன்?

2023 ஒக்டோபரில் சிறிலங்காவுக்கு வந்த சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6, அண்மையில் சிறிலங்காவின் தனித்துவமான பொருளாதார கடல் எல்லைக்குள் இருந்து, தனது குழு உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ உதவி கோரி, சிறிலங்கா கடற்படைக்கு ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது.

சீன கப்பல் குழு உறுப்பினர் ஒருவரின் சிறுநீரக நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆபத்து சமிக்ஞை அனுப்பப்பட்டது.

சிறிலங்கா கடற்படை உடனடியாக பதிலளித்து, நோயாளியை, சிகிச்சைக்காக காலி பொது மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு ஒரு படகை அனுப்பியது.

சிறிலங்காவுக்கு மிக அண்மையில் வருகை தந்த  சீன ஆய்வுக் கப்பல் ஷி யான் 6 ஆகும்.

முன்னர் அதன் வருகைக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அந்த நேரத்தில், இந்த எதிர்ப்பைக் கண்டு கவலையடைந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், அனைத்து ஆய்வுக் கப்பல்களுக்கும் தடை விதித்தது.

எதிர்காலத்தில் அத்தகைய கப்பல்களுக்கு ஒரு நிலையான  செயற்பாட்டு முறை  அறிமுகப்படுத்தப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியது.

இருப்பினும், 2024 ஜனவரி முதல், எந்தவொரு நிலையான செயல்பாட்டு நடைமுறையும் வகுக்கப்படவில்லை.

2024ஆம் ஆண்டில் அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஆய்வுக் கப்பல்கள் மீதான தடையை நீக்குமாறு சிறிலங்காவுக்கு சீனா மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்தது.

ஆனால் அரசாங்கம் சாதகமாக பதிலளிக்கவில்லை.

இந்தச் சூழலில், சிறிலங்காவின் தனித்துவமான பொருளாதார கடல் எல்லைக்கு அருகே ஷி யான் 6 கப்பல் இருந்தபோதே,  அதனிடம் இருந்து மருத்துவ உதவிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.

பணியாளருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஆபத்து சமிக்ஞையை வெளியிடுவதற்கு முன்னர், சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைய அந்தக் கப்பல் அனுமதி கோரவில்லை என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து சீனா இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

சீன ஆய்வுக் கப்பல்கள் சிறிலங்காவுக்குள் நுழைய தற்போதைய அரசாங்கம் அனுமதி வழங்கத் தயாராக இல்லை என்பதை இந்த முடிவு உணர்த்துகிறது.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக சீனா இதுவரை குறிப்பிடத்தக்க எந்தவொரு எதிர் நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

மாறாக, சீனத் தூதுவர் மிகவும் நிதானமாகவே இருப்பதாகத் தெரிகிறது.

சீன வாகனங்களுக்கான வளர்ந்து வரும் சந்தையாக சிறிலங்கா உருவெடுத்திருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

முன்னர், சிறிலங்காவின் சந்தையில் ஜப்பானிய வாகனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன.

2015ஆம் ஆண்டில், மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வாகனங்கள் மீதான வரி திருத்தங்களை அறிமுகப்படுத்தியது, இது இந்திய மாருதி மகிழுந்துகளின் பிரபலம் அதிகரிக்க வழிவகுத்தது.

கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதித் தடையை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளதால், சிறிலங்காவில் சீன மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

சீன ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும் மீறி, சிறிலங்காவின் வாகனச் சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்தும் சீனாவின் திறனே, சீனத் தூதுவரின் தளர்வான நிலைப்பாட்டிற்குக் காரணமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஆங்கில மூலம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம் – மவ்ரட்ட நியூஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *