சுவிஸ் தூதரக முயற்சி தடைப்பட்டதற்கு தமிழ் அரசுக் கட்சியே காரணம்
சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடத்த திட்டமிடப்பட்ட சந்திப்புக்கு தாங்கள் எந்த விதத்திலும் இடையூறாக இருக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடத்திய ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியப் பேரவையின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 15ஆம் நாள் வடக்கு கிழக்கை மையப்படுத்திய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சி எடுத்திருந்தோம்.
அதன் காரணமாக, சுவிஸ் அரசாங்கத்தால் எதிர்வரும் 19 ஆம் நாள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியப் பேரவைக்கும் தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இது முற்றிலும் தவறானது.
இது தொடர்பில் சுவிஸ் தூதரகத்தை தொடர்புகொண்டு 19ஆம் நாள் இடம்பெறவிருந்த கூட்டம் கைவிடப்பட்டுள்ளதா, தமிழ் தேசியப் பேரவை 15ஆம் நாள் நடத்தவுள்ள கூட்டம் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டப்பட்டதா? என்று வினவினேன்.
அதனை சுவிஸ் தூதரகம் முற்று முழுவதாக மறுத்தது. தாங்கள் அந்த முயற்சியை கைவிடவில்லை என்றும், கூறியிருந்தது.
தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பை தமிழ் அரசுக் கட்சியே கோரியிருந்த நிலையில், 15ஆம் நாள் இதுபோன்றதொரு கலந்துரையாடல் ஒழுங்கு செய்திருப்பதால், 19ஆம் நாள் இடம்பெறவிருக்கும் கலந்துரையாடலில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியிருந்ததால் தான், 19ஆம் நாள் கூட்டத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக சுவிஸ், தூதரகம் தெரிவித்திருந்தது.
19ஆம் நாள் சந்திப்புக்கு நாங்கள் எந்த விதத்திலும் இடையூறாக இருக்கவில்லை.
திட்டமிட்டு இந்த இரு கூட்டங்களையும் சிக்கலுக்குள்ளாக்கி பொய்யான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு தமிழ் அரசுக் கட்சி செய்த சதியாகவே நாங்கள் இதனைக் கருதுகிறோம்.
19ஆம் நாள் கூட்டம் அவசியமில்லை என்றால் 15ஆம் நாள் கூட்டத்துக்கு தமிழ் அரசுக் கட்சி கட்டாயம் வரவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.
